நாமக்கல் : ஊரடங்கை முழுமையாக கடைபிடித்த பொதுமக்கள்


நாமக்கல் : ஊரடங்கை முழுமையாக கடைபிடித்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 25 May 2020 7:55 AM IST (Updated: 25 May 2020 7:55 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 104 டிகிரி வெயில் பதிவானது. இதனால் பொதுமக்கள் ஊரடங்கை முழுமையாக கடைபிடித்ததால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. முதலில் மருந்து மற்றும் மளிகை கடைகள் மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.

பின்னர் ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் நகர்புறங்களில் உள்ள சலூன் கடைகளும் திறக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து ஏறத்தாழ 2 மாதங்களுக்கு பிறகு நாமக்கல்லில் நேற்று சலூன் கடைகள் திறக்கப்பட்டன. பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டதால் நேற்று காலையில் சாலைகளில் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக இருந்தது.

ஆனால் சலூன் கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் உள்பட அனைத்து கடைகளிலுமே நேற்று காலை 10 மணி வரை மட்டுமே பொதுமக்கள் வருகை அதிகமாக இருந்தது. அதன்பிறகு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் முழுமையாக ஊரடங்கை கடைபிடித்த பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

இதனால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. வாகன போக்குவரத்தும் மிக குறைவாகவே காணப்பட்டது. வெளியில் நடமாடும் பொதுமக்களும் குடைபிடித்து செல்வதை பார்க்க முடிந்தது. பிற்பகல் 2 மணிக்கு மேல் அனல்காற்று வீசியதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதலே ஒரு சில நாட்களை தவிர பெரும்பாலான நாட்கள் 100 டிகிரிக்கு மேலேயே வெயில் அளவு பதிவாகி வருகிறது. நேற்று அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் பதிவானது. இதனால் பொதுமக்கள் சாலையோரம் விற்பனை செய்யப்படும் தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றை வாங்கி சாப்பிடுவதை பார்க்க முடிந்தது. இதேபோல் குளிர்பான கடைகளிலும் வழக்கத்தை காட்டிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. 

Next Story