மல்லிகை விலை வீழ்ச்சி; விவசாயிகள் வேதனை


மல்லிகை விலை வீழ்ச்சி; விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 25 May 2020 3:17 AM GMT (Updated: 25 May 2020 3:17 AM GMT)

மல்லிகை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

திருமங்கலம்,

திருமங்கலம், கள்ளிக்குடி ஒன்றியங்களில் வலையங்குளம், புளியங்குளம், தூம்பக்குளம், உச்சப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் மல்லிகை சாகுபடி செய்துள்ளனர். மதுரை மல்லிக்கு எப்போது நல்ல விலை கிடைக்கும். தற்போது நல்ல விளைச்சல் உள்ளது. ஆனால் கொரோனா ஊரடங்கால் திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள் நடைபெறாததால் மல்லி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

விசேஷ காலங்களில் மல்லிகைப் பூக்களுக்கு நல்ல விலை கிடைக்கும். கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். தற்போது கிலோ 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரைதான் விற்பனை ஆகிறது. ஒரு கிலோ மல்லிகைப்பூ பறிக்க 40 ரூபாய் வரை கூலி கொடுக்க வேண்டும். உரச்செலவு, தண்ணீர் பாய்ச்சுதல், களையெடுத்தல் ஆகிய செலவுகளும் உள்ளன. எனவே மல்லிகைக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கடும் சிரமத்தில் உள்ளனர்.

பாதிப்பு

இது குறித்து வளையங்குளம் விவசாயிகள் கூறியதாவது:- மல்லிகைப்பூக்களை பறித்த உடன் வியாபாரிகளிடம் விற்பனை செய்ய வேண்டும். ஒரு நாள் வைத்து இருந்தாலும் மலர்ந்து விடும். பறித்த உடன் விவசாயிகள் அனைவரும் மார்க்கெட்டிற்கு மல்லிகையை கொண்டு செல்லும் போது விற்பனையாகாமல் இருக்கும். அப்போது சரியான விலை கிடைப்பது இல்லை.

இருப்பு வைத்து விற்க போதிய குளிர் சாதன வசதிகள் இல்லை. ஒவ்வொரு வருடமும் சாகுபடி செய்ய இடுபொருட்கள் உள்ளிட்ட செலவுகள் தான் அதிகம் ஏற்படுகிறது. செலவிற்கு ஏற்றார் போல் வரவு இல்லை. கொரோனாவால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story