மதுக்கடை திறக்கப்பட்டதையொட்டி மாநில எல்லையில் போலீஸ் டி.ஜி.பி. திடீர் ஆய்வு


மதுக்கடை திறக்கப்பட்டதையொட்டி மாநில எல்லையில் போலீஸ் டி.ஜி.பி. திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 25 May 2020 11:24 PM GMT (Updated: 25 May 2020 11:24 PM GMT)

மதுக்கடை திறக்கப்பட்டதையொட்டி மாநில எல்லை பகுதியான முள்ளோடையில் போலீஸ் டி.ஜி.பி. திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

பாகூர்,

புதுச்சேரியில் பல்வேறு நிபந்தனைகளுடன் நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதையொட்டி சில மதுக்கடை உரிமையாளர்கள் ஏற்கனவே முன் ஏற்பாடுகளை செய்து இருந்தனர். பல கடைகளில் நேற்று காலை மதுக்கடை திறப்பதற்கு முன்பு ஊழியர்கள் அவசர அவசரமாக ஏற்பாடுகளை செய்தனர். .

புதுச்சேரி மாநில எல்லையான முள்ளோடை, சோரியாங்குப்பம், கரையாம்புத்தூர் பகுதிகளில் மதுக்கடை மற்றும் சாராயக்கடைகளுக்கு அதிகமான மதுபிரியர்கள் வருவார்கள் என்று கிருமாம்பாக்கம், பாகூர் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். அதேபோல் மதுக்கடை உரிமையாளர்களும் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

இதையொட்டி மாநில எல்லை பகுதியான முள்ளோடையில் போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா நேற்று மாலை திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது நுழைவு வாயில் மதுக்கடை திறப்பு சம்பந்தமாக போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன் ஆகியோரிடம் விளக்கம் கேட்டறிந்தார். பின்னர் கிருமாம்பாக்கம், முள்ளோடை, பாகூர் ஆகிய பகுதிகளிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

நேற்று காலை சோரியாங்குப்பத்தில் துணை கலெக்டர் சஷ்வத் சவுரப் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாத பரிக்கல்பட்டு சாலையில் இருந்த மதுக்கடை உள்ளிட்ட 3 கடைகளை மூடினார். பின்னர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்த பிறகு மதுக்கடைகளை திறக்க அனுமதித்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பானது.

ஆனால் வழக்கத்தைவிட குறைந்த எண்ணிக்கையிலேயே மதுபிரியர்கள் வந்து மதுபாட்டில்கள் வாங்கிச் சென்றனர். கடை தொடங்கும் போது கூட்டம் இருந்தது. பிறகு படிப்படியாக குறைந்து விட்டது என்று கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.

Next Story