கோவை மாவட்டத்தில் 540 மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கல்வித்துறை அதிகாரிகள் தகவல்
கோவை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 540 மையங்களில் நடக்கிறது என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை,
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் தொடங்க இருந்தது. ஆனால் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு அரசியல் கட்சியினர், ஆசிரியர் சங்கங்கள் முன்வைத்தன. தேர்வு நடக்குமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்று மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வந்தது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வருகிற ஜூன் மாதம் 1-ந் தேதி தேர்வு தொடங்கும் என்று அரசு அறிவித்தது. இந்த திடீர் அறிவிப்பு பெற்றோர், மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனா நோய்த்தொற்று இருக்கும் நிலையில், எப்படி நடத்தப்படும்? மாணவர்களுக்கு பாதுகாப்பு இருக்குமா? என்பது உள்பட பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதையடுத்து இந்த தேர்வு ஜூன் 15-ந் தேதி தொடங்கும் என்றும், அதற்கான அட்டவணையும் அரசு வெளியிட்டது.
540 தேர்வு மையங்கள்
இதனால் கோவை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கான ஆயத்த பணிகள் தொடங்கி மும்முரமாக நடந்து வருகின்றன. தேர்வு மையங்கள், கட்டுகாப்பு மையங்கள், வினாத்தாள் கொண்டு செல்வது எப்படி? என்பன உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த மார்ச் மாதம் தொடங்க இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுத 140 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. கொரோனா பாதிப்பு காரணமாக தேர்வு தள்ளிவைக்கப்பட்டு, ஜூன் 15-ந் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டதால் தற்போது தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. அத்துடன் அனைத்து பள்ளிகளையும் தேர்வு மையங்களாக மாற்றலாம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தர விட்டது.
அதன்படி மாவட்டம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுத மொத்தம் 540 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் 41 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வை எழுதுகிறார்கள். வெளியூர்களில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் இ-பாஸ் பயன்படுத்தி தேர்வு எழுத வர அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் கல்வித்துறை அறிவித்தபடி சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, ஒவ்வொரு தேர்வு அறையிலும் 10 மாணவர்கள் மட்டும் அமரவைப்பது, அனைவரும் முககவசம் அணியவைப்பது, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
சிறப்பு குழு
இதுதவிர பொதுத்தேர்வு மற்றும் மையங்கள் தொடர்பாக மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களை போக்க முதன்மை கல்வி அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் சிறப்பு குழுவினரின் செல்போன் எண்களும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இந்த சிறப்பு குழுவில் முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் தாமோதரன், நீலாம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நேரு, பெரியப்புத்தூர் பள்ளி தலைமை ஆசிரியர் அருணாச்சலம், குரும்பபாளையம் பள்ளி தலைமை ஆசிரியர் பாலன் மற்றும் கவுண்டம்பாளையம் பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரன் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
மாணவர்களுக்கு தேர்வு குறித்து சந்தேகம் ஏற்பட்டால் 9894863972, 9080875781, 9486618858, 9894731320, 8838089283 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளலாம்
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story