ரம்ஜான் பண்டிகையையொட்டி வீடுகளில் சிறப்பு தொழுகை நடத்திய முஸ்லிம்கள் வீடியோ அழைப்பு மூலம் உறவினர்களுக்கு வாழ்த்து


ரம்ஜான் பண்டிகையையொட்டி  வீடுகளில் சிறப்பு தொழுகை நடத்திய முஸ்லிம்கள்   வீடியோ அழைப்பு மூலம் உறவினர்களுக்கு வாழ்த்து
x
தினத்தந்தி 26 May 2020 7:59 AM IST (Updated: 26 May 2020 7:59 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கால் திருப்பூர் மாவட்டம் முழுவதும் ரம்ஜான் பண்டிகையையொட்டி அவரவர் வீடுகளில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். செல்போனில் வீடியோ அழைப்பு மூலம் உறவினர்களை தொடர்பு கொண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

திருப்பூர்,

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான ஈகைத்திருநாளாம் ரம்ஜான் பண்டிகை திருப்பூர் மாவட்டம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. ரம்ஜான் நோன்பு முடித்து ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வழக்கமாக பள்ளிவாசல்கள் மற்றும் பொது திடல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடக்கும். கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக நேற்று பள்ளிவாசல்கள், பொது திடல்களில் சிறப்பு தொழுகை நடத்தப்படவில்லை. அவரவர் வீடுகளிலேயே முஸ்லிம்கள் ரம்ஜான் தொழுகை நடத்தினார்கள். பள்ளிவாசல்களில் அந்தந்த மதத்தலைவர் மட்டும் தொழுகை நடத்தினர்.

ரம்ஜான் தொழுகை குறித்து பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்யப்பட்டதும் வீட்டில் உள்ள ஆண்களில் பெரியவர்கள் தொழுகை நடத்தினார்கள். பெண்கள், குழந்தைகள் தொழுகையில் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு பொருளாதார குறைவு காரணமாகவும், ஜவுளிக்கடைகளுக்கு கூட்டமாக சென்று ஜவுளி எடுப்பதை தவிர்க்கும் வகையிலும் பெரும்பாலானவர்கள் ரம்ஜான் பண்டிகைக்கு புத்தாடைகள் எடுக்கவில்லை. குறிப்பாக வீட்டில் உள்ள சிறுவர்களுக்கு மட்டும் புத்தாடைகள் எடுத்தனர். பெரியவர்களில் பெரும்பாலானவர்கள் புத்தாடை எடுக்கவில்லை. இருப்பதை வைத்துக்கொண்டு ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

வீடியோ அழைப்பு

ரம்ஜான் தொழுகைக்கு முன்பு தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உணவுப்பொருட்கள், பண உதவி ஆகியவற்றை தானமாக கொடுத்தனர். உறவினர்கள், நண்பர்களை ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்து கூறுவது வழக்கம். நேற்று பெரும்பாலானவர்கள் விலகி இருந்தே வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். சிலர் தங்கள் வீட்டில் இருந்தபடி உறவினர்களுக்கு செல்போனில் வீடியோ அழைப்பு மூலமாக ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

வழக்கமாக ரம்ஜான் பண்டிகையன்று முஸ்லிம்கள் புத்தாடைகள் அணிந்து சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள். அதுபோல் பிரியாணி விருந்து கொடுத்து உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மாற்று மதத்தினருக்கு கொடுத்து உற்சாகமடைவார்கள். ஆனால் நேற்று பிரியாணி வழங்குவதில் கூட விதிமுறைகளை கடைபிடித்தனர்.

பள்ளிவாசல்களில் பலர் கூட்டமாக கூடி சிறப்பு தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டு இருந்ததால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்கள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

பல்லடம்

இதே போல பல்லடம் பகுதியில் முஸ்லிம்கள் தங்கள் வீடுகளில் தொழுகை நடத்தி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினார்கள். பின்னர் செல்போனில் வீடியோ அழைப்பில் நண்பர்கள், உறவினர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தனர். அதிகாலையில் பல்லடத்தில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளிலும் முஸ்லிம்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. ஊரடங்கு காரணமாக சேவூர் பகுதிகளில் முஸ்லிம்கள் தங்கள் வீடுகளில் தொழுகை நடத்தி அக்கம், பக்கத்தினருக்கு பிரியாணி வழங்கி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினார்கள்.

Next Story