ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 21 ஆயிரம் பேர் கைது 7,786 வாகனங்கள் பறிமுதல்


ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 21 ஆயிரம் பேர் கைது   7,786 வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 26 May 2020 8:58 AM IST (Updated: 26 May 2020 8:58 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 21 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை, 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவுப்படி, ஊரடங்கு உத்தரவுகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் இந்த ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டவர்கள் மீது இதுவரை 15 ஆயிரத்து 949 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த வழக்குகளின் அடிப்படையில் 21 ஆயிரத்து 349 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 7,786 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 195 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 248 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 64 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது போல் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட 3 நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்த 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஊரடங்கு விதிமீறல்களை தடுக்கும் வகையில் காவல்துறை அதிகாரிகள் மூலம், மதுரை மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த தடை உத்தரவை அனைத்து பொதுமக்களும் கண்டிப்பாக கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு தருமாறும், விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அறிவுறுத்தி இருக்கிறார்.

Next Story