சேலத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு பணி இடைநீக்கம்


சேலத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 26 May 2020 3:34 AM GMT (Updated: 26 May 2020 3:34 AM GMT)

சேலத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

சேலம்,

சேலம் இரும்பாலை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இளஞ்சேரன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் இளம்பிள்ளை பகுதியில் உள்ள சில கடைகளின் உரிமையாளர்களை மிரட்டி பணம் வசூலிப்பதாக போலீஸ் கமிஷனருக்கு புகார் வந்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்த போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கையை கமிஷனரிடம் சமர்ப்பித்தனர். இதில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளஞ்சேரன் கடை உரிமையாளர்களை மிரட்டி பணம் கேட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை பணி இடைநீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்காடு அடிவாரம் பகுதியில் கன்னங்குறிச்சி போலீஸ் ஏட்டு பிரகாஷ் என்பவர் பணியில் இருந்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக போலீஸ் அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதன்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் அவர் குடிபோதையில் பணியில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸ் ஏட்டு பிரகாசை பணி இடைநீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதே போலீஸ் நிலையத்தில் குடிபோதையில் பணியில் இருந்த போலீஸ் ஏட்டு பழனிவேல் என்பவர் சில நாட்களுக்கு முன்பு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story