ராமேசுவரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழாவின் முதல் 2 நாள் நிகழ்ச்சிகள் ரத்து


ராமேசுவரம் கோவிலில்   ராமலிங்க பிரதிஷ்டை விழாவின் முதல் 2 நாள் நிகழ்ச்சிகள் ரத்து
x
தினத்தந்தி 26 May 2020 11:23 AM IST (Updated: 26 May 2020 11:23 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் கோவிலின் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவின் முதல் 2 நாள் நிகழ்ச்சிகள், பூஜைகள் ரத்து செய்யப்பட்டு, 3-ம் நாள் திருவிழா மட்டுமே நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ராமேசுவரம்,

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கோவிலின் தல வரலாற்றை விளக்கும் வகையில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டின் தல வரலாற்றை விளக்கும் திருவிழா வருகிற 30-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற இருந்தது.

தற்போது கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் ராமேசுவரம் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள் மூடப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமேசுவரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவை ஒரு நாள் மட்டும் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து திருக்கோவில் அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:- கொரோனா பரவலை தடுக்க பக்தர்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க கோவில்களில் திருவிழாக்களை நடத்தக்கூடாது என அரசால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

3-ம்நாள் திருவிழா

இதன்காரணமாக இந்த ஆண்டு ராமேசுவரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவில் முதல் நாள் திருவிழாவான ராவண சம்காரம் மற்றும் 2-ம் நாள் திருவிழாவான விபீஷ்ணர் பட்டாபிஷேகம் ஆகிய 2 நாள் திருவிழா ரத்து செய்யப்படுகிறது. 3-ம் நாள் திருவிழாவான ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா மட்டும் கோவிலுக்குள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story