சொந்த ஊருக்கு செல்ல டோக்கன் பெற வந்த பீகார் தொழிலாளர்களால் பரபரப்பு ; ஈரோடு தாலுகா அலுவலகத்தில் இன்று வழங்கப்படுகிறது


சொந்த ஊருக்கு செல்ல டோக்கன் பெற வந்த பீகார் தொழிலாளர்களால் பரபரப்பு ; ஈரோடு தாலுகா அலுவலகத்தில் இன்று வழங்கப்படுகிறது
x
தினத்தந்தி 26 May 2020 6:42 AM GMT (Updated: 26 May 2020 6:42 AM GMT)

சொந்த ஊருக்கு செல்லும் பீகார் மாநில தொழிலாளர்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ஈரோடு தாலுகா அலுவலகத்தில் டோக்கன் வழங்கப்படுகிறது. ஆனால் முன்னதாக நேற்றே வந்து குவிந்த தொழிலாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

வட மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்து வந்து ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் வேலை செய்து வரும் தொழிலாளர்கள் விரும்பினால் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள். ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை மற்றும் போலீஸ் துறை அதிகாரிகள் இந்த பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

கொரோனா ஊரடங்கு காரணமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் வடமாநில தொழிலாளர்கள் ஏற்கனவே விண்ணப்பித்து உள்ளனர். அவர்களின் பெயர் மற்றும் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் விருப்பத்தை அதிகாரிகள் கேட்டு தெரிந்து கொள்கிறார்கள். அதைத்தொடர்ந்து அவர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. இந்த டோக்கன் வழங்கும்போது தொழிலாளர்கள் எங்கிருந்து பயணம் செய்ய வேண்டும். எந்த தேதியில் ரெயில் அல்லது பஸ்சில் செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். அதன்படி தொழிலாளர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு அனுப்பப்படுகிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் இருந்து உத்தரபிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். ராஜஸ்தான் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த பலரும், கோவை, சேலம், சென்னை அழைத்துச்செல்லப்பட்டு அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் 28-ந் தேதி ஈரோடு ரெயில்நிலையத்தில் இருந்து பீகார் மாநிலத்துக்கு ஒரு ரெயில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த ரெயிலில் செல்ல பீகார் தொழிலாளர்களுக்கு டோக்கன் இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கப்படுகிறது. ஆனால் நேற்றே டோக்கன் வழங்கப்படுவதாக தொழிலாளர்களுக்கு தகவல் பரவியதாக தெரிகிறது. அதை நம்பி நேற்று ஈரோடு தாலுகா அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குவிந்தனர். அவர்களிடம் அதிகாரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வந்து டோக்கன் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தினர். ஆனாலும் தொழிலாளர்கள் அங்கேயே குவிந்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களை கலைத்து புறப்படச்செய்தனர்.

இதுபற்றி ஈரோடு தாசில்தார் பரிமளாதேவி கூறும்போது, “பீகார் மாநில தொழிலாளர்கள் வசதிக்காக நாளை (அதாவது இன்று) ஈரோடு சி.எஸ்.ஐ. அரங்கம், ஒட்டக்கூத்தர் செங்குந்தர் திருமண மண்டபம், மாநகராட்சி தமயந்தி பாபு சேட் திருமண மண்டபம், மாநகராட்சி திருமண மண்டபம், மல்லிகை அரங்கம் ஆகிய 5 இடங்களில் டோக்கன்கள் வழங்கப்படும். இது குறித்து அந்தந்த பகுதியினருக்கு ஏற்கனவே தகவல்கள் தெரிவிக்கப்பட்டு விட்டது. தாலுகா அலுவலகத்துக்கு தொழிலாளர்கள் வரவேண்டியது இல்லை. யாரோ தவறாக அவர்களை வழிநடத்தி உள்ளனர்”, என்றார்.

இதுபோல் ஒடிசா செல்லும் தொழிலாளர்களுக்காக நாளை (புதன்கிழமை) ஈரோட்டில் இருந்து ரெயில் ஒன்று புறப்படுகிறது. இதில் செல்ல டோக்கன் பெறாதவர்களுக்கும் இன்று (செவ்வாய்க்கிழமை) டோக்கன் வழங்கப்படுகிறது.

Next Story