62 நாட்களுக்கு பிறகு சென்னை ரிச்சி தெரு கடைகள் திறப்பு


62 நாட்களுக்கு பிறகு சென்னை ரிச்சி தெரு கடைகள் திறப்பு
x
தினத்தந்தி 27 May 2020 12:15 AM GMT (Updated: 26 May 2020 7:30 PM GMT)

சென்னை ரிச்சி தெருவில் 62 நாட்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டன.

சென்னை, 

சென்னை அண்ணாசாலையில் உள்ள ரிச்சி தெருவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இயங்கி வருகின்றன. சுமார் 2 ஆயிரம் கடைகளுக்கு மேல் இயங்கி வரும் இந்த எலக்ட்ரானிக் சந்தையானது ஆசிய அளவில் உள்ள பெரிய சந்தைகளில் ஒன்றாக விளங்குகிறது.

இங்கு சாதாரண டி.வி. ரிமோட் முதல் கம்ப்யூட்டர் உள்ளிட்ட அனைத்து வகையான எலக்ட்ரானிக் பொருட்களும் அவற்றுக்கான உதிரிபாகங்களும் விற்பனை செய்யப்படுவது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 62 நாட்களாக கடைகள் மூடப்பட்டு இருந்தன. நேற்று முதல் ரிச்சி தெருவில் உள்ள கடைகள் அதிக அளவில் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது.

இது குறித்து அகில இந்திய ரேடியோ மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சங்கத்தின் தென் மண்டல தலைவர் முகேஷ் குப்சந்தானி கூறியதாவது:-

இங்குள்ள கடைகளையும் திறக்க பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

அப்போது ஏற்பட்ட உடன்பாட்டின்படி, ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை அடிப்படையில் கடைகளை திறக்க அனுமதி அளித்தனர். கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க எங்கள் சங்கத்தின் சார்பில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று கடைகள் திறக்கப்பட்டதையொட்டி, ஏராளமானோர் அங்கு வந்து பொருட்களை வாங்கிச் சென்றனர்.

Next Story