வால்பாறையில் உணவு, தண்ணீரை தேடி அலையும் காட்டுயானை கூட்டம்
வால்பாறையில் உணவு, தண்ணீரை தேடி காட்டுயானை கூட்டம் அலைகின்றன.
வால்பாறை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ளது வால்பாறை. இங்குள்ள வனப்பகுதிகளில் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை வறட்சி நிலவும். அப்போது வனப்பகுதிகளில் பசுந்தீவனம் குறைந்து, நீர்நிலைகளும் வறண்டு விடும். அதன்படி கடந்த சில நாட்களாக வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்தது.
மேலும் வறட்சியால் வனப்பகுதிகளில் பசுந்தீவனம் குறைந்து, நீர்நிலைகள் வறண்டன. இதன் காரணமாக வால்பாறை வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டுயானைகள் கூட்டம், கூட்டமாக தமிழக-கேரள எல்லையை ஒட்டி உள்ள கேரள வனப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்றுவிட்டன.
உணவு மற்றும் தண்ணீரை தேடி...
இந்த நிலையில் ஒருசில காட்டுயானை கூட்டங்கள் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வேவர்லி, கவர்க்கல், உருளிக்கல், பாரளை, புதுத்தோட்ட பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு வருகின்றன. உணவு மற்றும் தண்ணீரை தேடி அலையும் அந்த காட்டுயானை கூட்டங்கள் ஒவ்வொரு இடங்களாக இடம்பெயர்ந்து செல்கின்றன.
சமீபத்தில் உருளிக்கல் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டு இருந்த 4 காட்டுயானைகளை கொண்ட கூட்டம், அங்குள்ள சாலைகளிலும் உலா வந்தன. பின்னர் சாலைகளை கடந்து, அருகில் உள்ள செலாளிப்பாறை வனப்பகுதிக்குள் சென்றன.
கவனமாக செல்ல வேண்டும்
இதேபோன்று வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் உள்ள ஆழியார் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 3 குட்டிகளுடன் 9 காட்டுயானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டு வருகின்றன. இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
வனப்பகுதிகளில் வறட்சி நிலவுவதால், காட்டுயானைகள் இடம்பெயர்ந்து வருகின்றன. அவ்வப்போது கோடை மழை பெய்தாலும், வறட்சி முழுமையாக நீங்கவில்லை. எனவே வால்பாறை பகுதிகளில் உள்ள எஸ்டேட்டுகளில் குடியிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அதிகாலை, இரவு, மாலை நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். சாலைகளில் செல்லும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story