ஊட்டியில் தனிமைப்படுத்தப்பட்ட காந்தல் பகுதியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு


ஊட்டியில்  தனிமைப்படுத்தப்பட்ட காந்தல் பகுதியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு
x
தினத்தந்தி 27 May 2020 4:32 AM IST (Updated: 27 May 2020 4:32 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் தனிமைப்படுத்தப்பட்ட காந்தல் பகுதியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டார்.

ஊட்டி,

சென்னை வியாசர்பாடியில் இருந்து இ-பாஸ் பெற்று பிரசவத்துக்காக தாய் வீடான ஊட்டி காந்தல் பகுதிக்கு வந்த 8 மாத கர்ப்பிணிக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அவர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது தாய், தந்தையிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் தொடர்பில் இருந்தவர்களிடம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு குன்னூர் பாஸ்டியர் இன்ஸ்டியூட் நிறுவன ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கொரோனா தொற்று அறிகுறி தென்பட்டதை தொடர்ந்து காந்தலில் பாரதியார் தெரு, தபால் நிலைய தெரு, பேபி ஹால் லைன், எல்.ஐ.சி. காலனி உள்ளிட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டன.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் நேற்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, தனிமைப்படுத்தப்பட்ட காந்தல் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். நகராட்சி மூலம் தினமும் 3 முறை கிரு மிநாசினி தெளிக்கப்படுகிறதா, பொதுமக்களுக்கு காய்கறிகள், மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கிறதா என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அப்போது மக்களிடம் முகக்கவசம், வைட்டமின் சி மற்றும் ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்பட்டதா என கேட்டறிந்தார். அதற்கு மக்கள் வழங்கப்பட்டது என்றனர். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியே செல்லவும், வெளியாட்கள் உள்ளே வரவும் அனுமதி இல்லை. இதை கண்காணிக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் யாரேனும் வந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.

52 பேருக்கு பாதிப்பு இல்லை

அதன்பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் இருந்து ஊட்டி காந்தலில் உள்ள தாய் வீட்டுக்கு பிரசவத்துக்காக வந்த கர்ப்பிணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. முன்னதாக அவர் 2 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டார். தொடர்பில் இருந்த 52 பேரிடம் சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. முடிவில் 52 பேருக்கும் பாதிப்பு இல்லை. அறிகுறி தென்பட்டதை அடுத்து காந்தல் பகுதியில் 100 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு நகராட்சி மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருவதுடன், மக்களுக்கு கபசுர குடிநீர், சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பாலுசாமி, ஊட்டி நகராட்சி கமி‌‌ஷனர் சரஸ்வதி, வருவாய் கோட்டாட்சியர் சுரே‌‌ஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Next Story