அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்திய அரசாணைக்கு எதிராக வழக்கு உரிய விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் உரிய விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
விருதுநகர் மாவட்டம் வன்னியம்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜவகர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழக அரசு கடந்த 7-ந் தேதி அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 59-ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டது. அதில் இம்மாதம் 1-ந்தேதி முதல் இந்த அரசாணை அமல்படுத்தப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. நான் 30.4.2020 அன்று ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் இந்த கல்வியாண்டு முடிவு பெறாததால் மே 31-ந் தேதி வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எனக்கு இந்த வயது நீட்டிப்பு பொருந்தாது. கொரோனா நோய்த்தொற்று பிப்ரவரி மாதம் முதல் இங்கு இருந்து வருகிறது.
அரசாணை ரத்து
இந்த இக்கட்டான காலத்தில் பணியாற்றிய அரசுப்பணியாளர்கள் பயன் பெறும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தி வெளியிட்ட அரசாணை கடந்த 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என உத்தரவிட்டதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். என்னை போன்றவர்களின் பணியும் ஓராண்டுக்கு நீட்டிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இதேபோல சிவகங்கையை சேர்ந்த ஜெயமங்களம் என்பவரும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், நான் திருப்புவனம் பள்ளியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியராக உள்ளேன். எனது பணி கடந்த மாதம் 30-ந்தேதியுடன் முடிகிறது. ஆனால் மே மாதம் 1-ந்தேதி முதல் அரசு பணியாளர் ஓய்வு பெறும் வயது 59 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது ஏற்புடையதாக இல்லை. எங்களின் பணியையும் ஓராண்டு நீட்டித்து உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
விளக்கம் அளிக்க உத்தரவு
இந்த மனுக்கள் நீதிபதி நிஷாபானு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுக்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி விசாரித்தார். அப்போது, இந்த மனுக்கள் குறித்து தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்கும்படி அரசு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்குகளின் மீதான விசாரணையை இன்றைக்கு ஒத்தி வைத்தார்.
Related Tags :
Next Story