ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து முன்னணியினர் தோப்புக்கரணம் போடும் போராட்டம்


ஸ்ரீவில்லிபுத்தூரில்  இந்து முன்னணியினர் தோப்புக்கரணம் போடும் போராட்டம்
x
தினத்தந்தி 27 May 2020 8:57 AM IST (Updated: 27 May 2020 8:57 AM IST)
t-max-icont-min-icon

கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் தோப்புக் கரணம் போடும் போராட்டம் நடத்தினர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலுள்ள அனைத்து கோவில்களையும் திறந்து பக்தர்கள் வழிபாட்டுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணியினர் தமிழகம் முழுவதும் நேற்று தோப்புக் கரணம் போராட்டம் நடத்தினர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில், பெரிய மாரியம்மன் கோவில், கிருஷ்ணன் கோவில், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில், வைத்தியநாத சாமி கோவில் என 5 கோவில்களில் இந்து முன்னணியினர் தோப்புக்கரணம் போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒவ்வொரு கோவில் முன்பும் சுமார் 21 தோப்புக்கரணம் போட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, மாவட்ட தலைவர் யுவராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ், நகர பொதுச் செயலாளர் சந்திரசேகர், நகர செயலாளர் முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் இந்து முன்னணி மாநில துணை அமைப்பாளர் பொன்னையா தலைமையில் வத்திராயிருப்பு முத்தலாம்மன் கோவில் முன்பு போராட்டம் நடைபெற்றது. இதில் நகர தலைவர் பொன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தளவாய்புரம்

சேத்தூர் அருகே உள்ள தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் முன்பு ராஜபாளையம் இந்து முன்னணி அமைப்பாளர் சுப்பிரமணியன் தலைமையில் தோப்புக்கரணம் போட்டு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Next Story