நெல்லை, தூத்துக்குடியில் மேலும் 11 பேருக்கு கொரோனா - தென்காசியில் புதிதாக தொற்று இல்லை


நெல்லை, தூத்துக்குடியில் மேலும் 11 பேருக்கு கொரோனா - தென்காசியில் புதிதாக தொற்று இல்லை
x
தினத்தந்தி 28 May 2020 4:30 AM IST (Updated: 27 May 2020 10:42 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தூத்துக்குடியில் மேலும் 11 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். தென்காசியில் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.

தூத்துக்குடி,

நெல்லை மாவட்டத்துக்கு வடமாநிலங்களில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் உள்ளூர் மக்கள் வந்து இறங்குகிறார்கள். அதேபோல் சிறப்பு பஸ்கள் மற்றும் வேன்கள் மூலம் நெல்லை மாவட்டத்துக்கு வருகின்றனர்.

அவர்களுக்கு மாவட்ட எல்லையான கங்கைகொண்டான் சோதனை சாவடியில் கொரோனா உள்ளிட்ட பரிசோதனை செய்யப்படுகிறது. பின்னர் அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

4 பேருக்கு தொற்று

நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 297 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று முன்தினம் யாருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் நேற்று மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் களக்காடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் 4 பேரும் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டனர். அந்த பகுதியில் சுகாதாரப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதன்மூலம் நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 301 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பெண் உள்பட 8 பேர் பூரண குணம் அடைந்து வீடு திரும்பினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 187 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

நேற்று மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்து, தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் இருந்த 5 பேருக்கும், கோவில்பட்டியை சேர்ந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 194 ஆக உயர்ந்து உள்ளது.

8 பேர் வீடு திரும்பினர்

இதற்கிடையே, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 8 பேர் முழுமையாக குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். அவர்களுக்கு டாக்டர்கள் பழங்கள் வழங்கினர். தொடர்ந்து சித்த மருத்துவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் குறித்து விளக்கம் அளித்தனர். உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி மற்றும் டாக்டர்கள் அவர்களை வழியனுப்பி வைத்தனர்.

குணமடைந்த அனைவரும் 14 நாட்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்து உள்ளது.

நன்றி தெரிவித்த சிறுமி

கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சிறுமி கூறுகையில், “நான் 10 நாட்களாக இந்த அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். இங்கு நல்ல தரமான உணவு வழங்கப்பட்டது. சத்தான உணவுகள் உரிய நேரத்தில் தந்தார்கள். டாக்டர்கள், நர்சுகள் நல்ல முறையில் கவனித்து கொண்டார்கள். இதனால் நான் விரைவாக குணமடைந்து உள்ளேன். அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களுக்கும், நர்சுகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்“ என்றார்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் இதுவரை 85 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று யாருக்கும் புதிதாக தொற்று ஏற்படவில்லை.

Next Story