விலை உயர்வால் மது விற்பனை பாதியாக சரிந்தது


விலை உயர்வால் மது விற்பனை பாதியாக சரிந்தது
x
தினத்தந்தி 28 May 2020 5:14 AM IST (Updated: 28 May 2020 5:14 AM IST)
t-max-icont-min-icon

விலை உயர்வால் புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட 3-வது நாளான நேற்று மது விற்பனை பாதியாக சரிந்தது.

புதுச்சேரி,

புதுவையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த 25-ந் தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டன. தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு மது குடிக்க வருபவர்களால் கொரோனா தொற்று பரவி விடாமல் தடுக்கும் விதமாக புதுவையில் மதுபான விலை 2 மடங்கு உயர்த்தப்பட்டது.

இந்த விலை உயர்வு மதுபிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அவர்களது பார்வை சாராயக்கடை பக்கம் திரும்பியது. இதனால் சாராயம் விற்பனை அமோகமானது. மதுபானம் விற்பனை தொடங்கிய முதல் நாளன்று மது பிரியர்கள் அதிகம்பேர் வந்ததையடுத்து ரூ.3 கோடியே 83 லட்சத்திற்கு மதுபானங்கள் விற்பனையானது.

ஆனால் நேற்று முன்தினமும், நேற்றும் கூட்டமின்றி மதுக்கடைகள் வெறிச்சோடின. இதனால் 2-வது நாளன்று ரூ.1 கோடியே 45 லட்சத்திற்கு மட்டுமே மதுபானங்கள் விற்பனை ஆனது. 3-வது நாளான நேற்று பாதிக்கும் கீழ் மது விற்பனை கடுமையாக சரிந்தது. தமிழகத்துக்கு நிகராக மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது குறித்து மதுபான கடை உரிமையாளர் ஒருவரிடம் கேட்டபோது, ‘முதல் நாளில் எங்கள் கடையில் ரூ.4 லட்சத்துக்கு மதுபானம் விற்பனை ஆனது. 2-வது நாளில் அந்த விற்பனை ரூ.1 லட்சத்து 40 ஆயிரமாக குறைந்து விட்டது. 3-வது நாளான நேற்று மதுபானம் விற்பனை ரூ.1 லட்சத்தை கூட எட்டவில்லை. மதுபான விலைகளை கடுமையாக உயர்த்தியது தான் இதற்கு காரணம். விலை குறையும் வரை மதுபான கடைக்கு மதுப்பிரியர்கள் வருவது சந்தேகமே. விலை குறைவு காரணமாக சாராயக் கடைகளில் கூட்டம் இருக்கிறது.

கடைகளை திறக்கும் முன்பு கூட நாங்கள் நிம்மதியாக இருந்தோம். ஆனால் இப்போது நிம்மதி இழந்து தவிக்கிறோம். கடன் வாங்கி தொழில் செய்து வரும் எங்களது நிலைமை தலைகீழாக மாறி விட்டது. இனியாவது மது வகைகளின் விலை குறைக்கப்படுமா? என எதிர்பார்க்கிறோம்’ என்றார்.

Next Story