கொரோனா ஊரடங்கால் மூடிக்கிடக்கும் தட்டச்சு பயிற்சி நிலையங்கள் திறக்கப்படுமா? மாணவ-மாணவிகள் எதிர்பார்ப்பு


கொரோனா ஊரடங்கால்   மூடிக்கிடக்கும் தட்டச்சு பயிற்சி நிலையங்கள் திறக்கப்படுமா?  மாணவ-மாணவிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 28 May 2020 12:05 AM GMT (Updated: 28 May 2020 12:05 AM GMT)

கொரோனா ஊரடங்கு காரணமாக மூடிக்கிடக்கும் தட்டச்சு பயிற்சி நிலையங்கள் திறக்கப்படுமா? என்று மாணவ-மாணவிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கோவை,

கணினி பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. கணினியை பயன்படுத்த வேண்டும் என்றால் முக்கியமாக டைப்பிங் தெரிந்து இருக்க வேண்டும். அவ்வாறு டைப்பிங் தெரிந்து இருந்தால் மட்டுமே கணினியை எளிதாக பயன்படுத்தலாம்.

இதனால் டைப்பிங் பயிற்சி பெறுவதற்காக தனியாக தட்டச்சு பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கணினி தொடர்பான படிப்பு கூட பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி விடுமுறை நாட்களில் மாணவ-மாணவிகள் தங்கள் திறனை மேம்படுத்தும் வகையில் தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி பெறுவது வழக்கம். தற்போது கொரோனா ஊரடங்கால் தட்டச்சு பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தும், கொரோனா பாதிப்பு காரணமாக தட்டச்சு பயிற்சி நிலையங்கள் மூடிக்கிடப்பதால் மாணவ-மாணவிகள் தவித்து வருகின்றனர். அத்துடன் தட்டச்சு பயிற்சி பெற பயிற்சி நிலையங்கள் திறக்கப்படுமா? என்று எதிர்பார்த்து உள்ளனர்.

இதுகுறித்து கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்த தட்டச்சு நிலைய உரிமையாளர்கள் ஜெயா, ரமேஷ் ஆகியோர் கூறியதாவது:-

மாணவ-மாணவிகள் தவிப்பு

நாங்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தட்டச்சு பயிற்சி நிலையம் நடத்தி வருகிறோம். இதன்மூலம் மாணவ-மாணவிகளின் திறனை வளர்த்துக்கொள்ள பயன் உள்ளதாக இருந்தது. பள்ளி விடுமுறை நாட்களில் மாணவ-மாணவிகள் அதிக அளவில் தட்டச்சு படிக்க வருவார்கள். ஒரே நேரத்தில் அதிக மாணவர்கள் வருவது கிடையாது. குறைந்த அளவு மாணவர்கள் ஒரு மணி நேரம் வருவார்கள். அவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற முடியும்.

ஆனால் தற்போது கொரோனா காரணமாக தட்டச்சு பயிற்சி ஏதும் நடைபெறவில்லை. இதனால் தட்டச்சு பயிற்சி நிலையங்கள் மூடியே கிடக்கிறது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாணவ -மாணவிகளின் பயிற்சியும் பாதிக்கப்படுகிறது. இதுதவிர வருகிற ஆகஸ்டு மாதம் தட்டச்சு தேர்வு நடப்பதாக இருந்தது. ஆனால் அதுவும் கொரோனாவால் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் தட்டச்சு பயிலும் மாணவ-மாணவிகள் தவித்து வருகிறார்கள். எனவே தட்டச்சு பயிற்சி நிலையங்களை திறக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story