கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் 1,000 ஆங்கில பள்ளிகளை திறக்க முடிவு - மந்திரி சுரேஷ்குமார் அறிவிப்பு


கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் 1,000 ஆங்கில பள்ளிகளை திறக்க முடிவு - மந்திரி சுரேஷ்குமார் அறிவிப்பு
x
தினத்தந்தி 28 May 2020 12:36 AM GMT (Updated: 28 May 2020 12:36 AM GMT)

கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் 1,000 ஆங்கில பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மந்திரி சுரேஷ்குமார் அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் இருந்தபடி அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் கட்டாய கன்னடம் கற்றல் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடல் நடத்தினார். இதில் சுரேஷ்குமார் பேசியதாவது:-

கர்நாடகத்தில் கடந்த 2015-ம் ஆண்டு கட்டாய கன்னடம் கற்றல் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் பள்ளி கல்வித்துறை மற்றும் கன்னட வளர்ச்சி ஆணையம் ஆகிய இரண்டும் ஜோடி எருதுகளை போல் பணியாற்றும்.

ஆதரிக்க வேண்டும்

கன்னட மண்ணில் படிக்கும் ஒவ்வொரு குழந்தையும் கன்னட மொழியை கட்டாயம் கற்க வேண்டும். தகுதியான ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு கன்னடத்தை கற்பிக்க வேண்டும். இதை கர்நாடகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளின் நலன் கருதி இதை பெற்றோர் ஆதரிக்க வேண்டும்.

அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை தக்க வைத்துக்கொள்ள அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இன்றைய சூழ்நிலையில் கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்தும் தொழிலாளர்களும் தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள். அதற்கு அவர்கள் தங்களின் உழைப்பில் சுமார் 40 சதவீதத்தை செலவழிக்கிறார்கள்.

1,000 ஆங்கில பள்ளிகள்

ஆனால் அரசு பள்ளிகளின் தரத்தை தனியார் பள்ளிகளை விட உயர்த்தினால், அந்த தொழிலாளர்கள் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளிலேயே படிக்க வைப்பார்கள். இதன் மூலம் அவர்கள் கல்விக்கு செலவழிக்கும் தொகையை தங்களின் வாழ்க்கையை மேம்படுத்த பயன்படுத்தி கொள்வார்கள்.

சர்வதேச நிலைக்கு ஏற்ப கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் 1,000 ஆங்கில பள்ளிகளை தொடங்க முடிவு செய்துள்ளோம். அங்கு கன்னட வழி கல்விக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அந்த பள்ளிகளில் பாடத்திட்டம் கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இடம் பெறும். அரசின் இத்தகைய திட்டத்திற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்.

இவ்வாறு மந்திரி சுரேஷ் குமார் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கன்னட வளர்ச்சி ஆணைய தலைவர் நாகாபரண, செயலாளர் முரளிதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story