மீன்பிடி தடைக்காலம் முடிய உள்ளதால் படகுகள் சீரமைப்பு பணிகள் தீவிரம்


மீன்பிடி தடைக்காலம் முடிய உள்ளதால் படகுகள் சீரமைப்பு பணிகள் தீவிரம்
x

மீன்பிடி தடைக்காலம் முடியவடைய உள்ளதால் புதுச்சேரியில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தயாராகி வருகிறார்கள். இதையொட்டி படகுகள் தீவிரமாக சீரமைக்கப்பட்டு வருகின்றன.

புதுச்சேரி,

புதுவையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அன்று முதல் விசைப்படகுகளில் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

இந்தநிலையில் மீன்பிடி தடைக் காலத்தை குறைக்க வேண்டும் என்று மீனவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

இதையடுத்து மீன்பிடி தடைக்காலத்தை வரும் 31-ந் தேதியுடன் முடித்து கொள்வதாகவும், ஜூன் 1-ந் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என்றும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மீன்பிடித் தடைக்காலம் ஜூன் 14-ந் தேதி தான் முடிவடையும் என்று மீனவர்கள் கருதி இருந்தனர். தற்போது மே மாதத்துடன் முடிவடைவதால் படகுகளை சீரமைக்கும் பணிகளை துரித கதியில் தொடங்கியுள்ளனர். எஞ்சின் பழுதுபார்த்தல், வர்ணம் பூசுதல், வலைகளை சீரமைத்தல் போன்ற பணிகளில் அவர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இதனால் தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகம் தற்போது சுறுசுறுப்புடன் காணப்படுகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் பூஜை போட்டு மீனவர்கள் தங்கள் தொழிலை தொடங்க உள்ளனர். அதன்பின் புதுவையில் கடல் மீன் விலை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story