கொடைக்கானல் மலைப்பகுதியில் சமூக விரோதிகள் நடமாட்டத்தை கண்காணிக்க சிறப்பு தனிப்படை


கொடைக்கானல் மலைப்பகுதியில்  சமூக விரோதிகள் நடமாட்டத்தை கண்காணிக்க சிறப்பு தனிப்படை
x
தினத்தந்தி 28 May 2020 2:27 AM GMT (Updated: 28 May 2020 2:27 AM GMT)

கொடைக்கானல் மலைப்பகுதியில் சமூக விரோதிகள் நடமாட்டத்தை கண்காணிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல், 

கொடைக்கானல் நகரினை அடுத்த பில்லர்ராக்ஸ் வனப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக கஞ்சா பயிரிடப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கொடைக்கானல் போலீசார் கடந்த வாரம் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள கஞ்சா செடிகளை வெட்டி தீயிட்டு கொளுத்தி அழித்தனர். மேலும் அப்பகுதியில் சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ளதா? வேறு எங்கேனும் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதா? என்பதை அறிந்து கொள்வதற்காக சிறப்பு போலீஸ் தனிப்படையை அமைக்கவும் போலீசார் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று காலை நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சிங், சிறப்பு தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட போலீசார் துப்பாக்கிகளை ஏந்தியபடி பேரீஜம் செல்லும் வழியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான மதிகெட்டான் சோலையில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரம் மலைப்பாதையில் நடந்து சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். இவர்கள் சின்னூர், பெரியூர் வழியாக இன்று (வியாழக்கிழமை) காலை பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை பகுதிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story