தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம்


தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக்கோரி  ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 28 May 2020 2:42 AM GMT (Updated: 28 May 2020 2:42 AM GMT)

தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

திண்டுக்கல், 

ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.4 ஆயிரம், தூய்மை பணியாளர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 600ஆக ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அரசாணை வெளியிட வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சம்மேளனத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

இதையடுத்து நேற்று கோரிக்கையை வலியுறுத்தி திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அந்த சங்கத்தினர் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் கே.ஆர்.கணேசன் தலைமையில் நிர்வாகிகள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

மனு கொடுத்தனர்

இதையடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிட வேண்டும். கொரோனா தடுப்பு பணிக்காக ஒரு மாத ஊதியத்தை சிறப்பு ஊதியமாக வழங்க வேண்டும். மேலும் முக கவசம் மற்றும் கிருமிநாசினி மருந்து உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

இதேபோல் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்டக்குழு குணசீலன் தலைமையிலும், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட பொருளாளர் தனசாமி தலைமையிலும், நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைப்பாளர் ஸ்டாலின் தலைமையிலும், வத்தலக்குண்டுவில் மாவட்டக்குழு உறுப்பினர் ராமசாமி தலைமையிலும், நிலக்கோட்டையில் துணைத்தலைவர் அழகர்சாமி தலைமையிலும் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் நேற்று மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டது.

Next Story