வெளிமாநில தொழிலாளர்களை வேலைக்கு பயன்படுத்திவிட்டு கண்டுகொள்ளாமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
“வெளிமாநில தொழிலாளர்களை இவ்வளவு நாளாக வேலைக்கு பயன்படுத்திவிட்டு தற்போது கண்டுகொள்ளாமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல” என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மதுரை,
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மலைக்கண்ணு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கொரானோ நோய்த்தொற்று பரவல் காரணமாக தொழிலாளர்கள் அனைவரும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அதிலும் பிற மாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் சொல்ல முடியாத அளவுக்கு துயரத்தை அனுபவிக்கிறார்கள். அவர்களுக்கு தமிழக அரசு 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் எண்ணெய் போன்றவற்றையும் ஆயிரம் ரூபாயும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக வெளிமாநில தொழிலாளர்கள் பலர் தங்களை பதிவு செய்யவில்லை. அவ்வாறு பதிவு செய்யாத வெளிமாநில தொழிலாளர்களுக்கு அரசின் உதவி முறையாக கிடைக்கவில்லை.
இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டபோது பதிவு செய்யப்படாத வெளிமாநில தொழிலாளர்களின் தகவல்களை வழங்குமாறு தெரிவித்தார். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்த 1,600 தொழிலாளர்கள் தொடர்பான தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இருப்பினும் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
எனவே பதிவு செய்யாத மற்றும் ஒருங்கிணைக்கப்படாத வெளிமாநில தொழிலாளர்களுக்கு அரசின் உதவிகள் கிடைக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
நீதிபதிகள் கருத்து
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல், “வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், “இவ்வளவு நாளாக வெளிமாநில தொழிலாளர்களை வேலைகளுக்காக பயன்படுத்திவிட்டு, இப்போது கண்டுகொள்ளாமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல. கேரள மாநிலத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள், அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல மறுக்கின்றனர்.
ஆனால் தமிழகம் அவர்களை கையாளும் நிலை வெட்கமாக உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் ‘வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்’ என்பது மேடைப்பேச்சில் மட்டுமே இருக்கும்” என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
பதில் மனு
பின்னர், தமிழகத்தில் உள்ள பதிவு செய்து கொள்ளாத வெளிமாநில தொழிலாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஜூன்) 10-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story