நாட்டுத்துப்பாக்கி வெடித்து விவசாயி சாவு ; நண்பர்கள் 2 பேர் கைது


கைது செய்யப்பட்ட செந்தில்குமார்
x
கைது செய்யப்பட்ட செந்தில்குமார்
தினத்தந்தி 29 May 2020 8:45 AM IST (Updated: 29 May 2020 8:45 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம் அருகே, முயல் வேட்டைக்கு சென்றபோது நாட்டுத்துப்பாக்கி வெடித்து விவசாயி இறந்தார். இது தொடர்பாக அவரது நண்பர்கள் 2 பேர் கைது செய்யப் பட்டனர்.

ராசிபுரம்,

சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுகா குமாரபாளையம் அருகேயுள்ள மேற்கு காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் சின்னவன். இவரது மகன் சக்திவேல் (வயது 24). விவசாயி. இவரும், இவரது நண்பர்களான மங்களபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது வாலிபர் மற்றும் மங்களபுரம் ஊத்துக்குளிக்காடு பகுதியை சேர்ந்த செல்லமுத்து மகன் செந்தில்குமார் (40) ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் முயல்வேட்டைக்கு ராசிபுரம் அருகே மத்துருட்டு ஊராட்சியை சேர்ந்த சிங்கிலியன் கோம்பை மலைப்பகுதிக்கு சென்றனர்.

அப்போது அந்த பகுதியில் ரோட்டின் ஓரத்தில் ஒரு முயல் சென்றதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்தவுடன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளனர். அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக திடீரென்று நாட்டுத்துப்பாக்கி வெடித்தது. இதில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே சக்திவேல் இறந்துவிட்டார். பிறகு 17 வயது வாலிபர் மற்றும் செந்தில்குமார் ஆகிய இரண்டு பேரும் இறந்துபோன சக்திவேலின் உடலை அவரது வீட்டின் முன்பு போட்டுவிட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி அப்பகுதி மக்கள் மங்களபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், பேளுக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய குமார் மற்றும் மங்களபுரம் போலீசார், 17 வயது வாலிபர் மற்றும் செந்தில்குமார் ஆகிய 2 பேரையும் பிடித்து வந்து மங்களபுரம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் நடத்திய விசாரணையில், தான் வைத்திருந்த துப்பாக்கியை செந்தில்குமாரிடம் கொடுத்தபோது, துப்பாக்கி திடீரென்று வெடித்ததில் படுகாயம் அடைந்த சக்திவேல் சம்பவ இடத்தில் இறந்துபோனது தெரிய வந்தது.

இதுபற்றி மங்களபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 வயது வாலிபர் மற்றும் செந்தில்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நாட்டுத்துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். இறந்துபோன சக்திவேலின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story