வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களை 7 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிப்பு சுகாதாரத்துறை அறிவிப்பு


வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களை 7 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிப்பு   சுகாதாரத்துறை அறிவிப்பு
x
தினத்தந்தி 29 May 2020 9:42 AM IST (Updated: 29 May 2020 9:42 AM IST)
t-max-icont-min-icon

வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்கள் கண்டிப்பாக 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மதுரை,

மதுரை மாவட்டத்தில் சில தினங்களாக வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னை, மராட்டியம், குஜராத், உத்தரபிரதேசம், பஞ்சாப், பீகார், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 3500-க்கும் மேற்பட்டோர் மதுரை மாவட்டத்திற்கு வந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் உசிலம்பட்டி, மேலூர், கொட்டக்குடி, அரிட்டாபட்டி, பேரையூர், திருமங்கலம், கள்ளிக்குடி, திருப்பாலை, ஒத்தக்கடை, நாகமலைபுதுக்கோட்டை, காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 30 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு முகாம்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கு, முகாம்களில் வைத்து கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு ஒரு சில தினங்களில் வீட்டிற்கு அனுப்பப்பட்டு வந்தனர். இதனால் வெளிமாநிலத்தில் இருந்து வந்த நபர்களில் பெரும்பாலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் நோய் தொற்று பரவி இருக்கிறது. வரும் காலங்களில் வெளிமாநிலத்தில் இருந்து மதுரை வரும் அனைவரும் கண்டிப்பாக 7 நாட்கள் முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாரி விளக்கம்

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

வெளிமாநிலத்தில் இருந்து வரும் நபர்களுக்கு முதல்கட்டமாக தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. அதன் பிறகு அவர்கள் அந்த முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்படுகிறார்கள். அவர்கள் வந்து 3 முதல் 5 நாள்களுக்கு பிறகு தான் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. வந்த உடனே அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தால் அவர்களுக்கு பெரும்பாலும் கொரோனா பாதிப்பு இல்லை என்றுதான் தெரியவரும். எனவே தான் அவர்கள் முகாம்களிலேயே 3 முதல் 5 நாட்களுக்கு தங்க வைக்கப்பட்டு அதன் பின்னர் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. வருங்காலங்களில் வெளி மாநிலத்தில் இருந்து யார் வந்தாலும் அவர்கள் குறைந்தபட்சம் 7 முதல் 14 நாட்கள் வரை முகாம்களிலேயே தங்க வைக்கப்படுவார்கள்.

இதுபோல் விமானத்தில் வரும் நபர்களுக்கும் விமான நிலையத்திலேயே சில பரிசோதனைகள் செய்து அதன் பின்னர் அவர்கள் இங்குள்ள தனியார் ஓட்டல்களில் அவர்களது சொந்த செலவிலேயே தனிமைப்படுத்தப்பட இருக்கிறார்கள்.

விமானம்

மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விமானத்தில் மதுரை வரும் பட்சத்தில் அவர்கள் குறித்த தகவல் அந்தந்த மாவட்ட சுகாதார துறைக்கு தெரிவிக்கப்படும். அதன் பிறகு அந்த மாவட்ட நிர்வாகத்தினர் அவர்களை வீட்டிலேயோ அல்லது ஓட்டலிலோ தனிமைப்படுத்தி பாதுகாத்து கொள்வர்.

இதன் மூலம் கொரோனா பரவுதல் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்படுகிறது. வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் நலன் கருதி சுகாதார துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story