பீகாரை சேர்ந்த 1,600 பேர் ரெயிலில் சொந்த ஊர் பயணம்


பீகாரை சேர்ந்த 1,600 பேர் ரெயிலில் சொந்த ஊர் பயணம்
x
தினத்தந்தி 29 May 2020 11:50 AM IST (Updated: 29 May 2020 11:50 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் இருந்து பீகாரை சேர்ந்த 1,600 பேர் ரெயில் மூலம் சொந்த ஊர் புறப்பட்டனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் வேலை செய்து வரும் வட மாநில தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. ஏற்கனவே சொந்த ஊர்களுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் இருந்து சுமார் 17 ஆயிரம் வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலம் திரும்ப விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் மாநிலம் வாரியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள்.

அதன்படி கடந்த 20-ந் தேதி உத்தரபிரதேசத்தை சேர்ந்த 1,464 பேரும், 21-ந்தேதி ஒடிசாவை சேர்ந்த 1,464 பேரும், 22-ந்தேதி ஜார்கண்டை சேர்ந்த 1,464 பேரும், 24-ந்தேதி பீகாரை சேர்ந்த 1,600 பேரும், நேற்று முன்தினம் ஒடிசாவை சேர்ந்த 1,600 பேரும் சிறப்பு ரெயில்கள் மூலம் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து 6-வது கட்டமாக பீகார் மாநிலத்தை சேர்ந்த 1,600 பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுக்கான சிறப்பு ரெயில் நேற்று பிற்பகல் 3.15 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது. இதை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஈரோட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.

முன்னதாக அவர்கள் ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள பல்வேறு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். பின்னர் தொழிலாளர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, ஈரோடு ரெயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். சமூக இடைவெளி விட்டு வரிசையில் நின்ற அவர்கள் ஒவ்வொருவராக ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் ரெயிலில் ஏறி அமர்ந்ததும் ரெயில் புறப்பட்டு சென்றது.

இதற்கிடையே பீகார் மாநிலத்துக்கு நேற்று 2 சிறப்பு ரெயில்கள் இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், அதில் ஒரு சிறப்பு ரெயில் ரத்து ஆனதாகவும் கூறப்படுகிறது. இது தெரியாமல் பெருந்துறை, பவானி, அந்தியூர், சென்னிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தங்களது பெட்டி படுக்கைகளுடன் ஈரோட்டுக்கு வந்த ஏராளமான தொழிலாளர்கள் ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் முன்பு ஒன்று கூடினார்கள்.

அப்போது அவர்கள் செல்லும் ரெயில் ரத்து செய்யப்பட்ட விவரம் தெரியவர அவர்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜு பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story