பெங்களூருவில் இரட்டை கொலையில் தலைமறைவாக இருந்த 2 வாலிபர்கள் கைது - நண்பரை கொன்றதை பார்த்ததால், மற்றொருவரையும் தீர்த்து கட்டியது அம்பலம்


பெங்களூருவில் இரட்டை கொலையில் தலைமறைவாக இருந்த 2 வாலிபர்கள் கைது - நண்பரை கொன்றதை பார்த்ததால், மற்றொருவரையும் தீர்த்து கட்டியது அம்பலம்
x
தினத்தந்தி 29 May 2020 9:45 PM GMT (Updated: 29 May 2020 6:16 PM GMT)

பெங்களூருவில் இரட்டை கொலையில் தலைமறைவாக இருந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். நண்பரை கொன்றதை பார்த்ததால் மற்றொருவரையும் தீர்த்து கட்டிய பயங்கரம் நடந்துள்ளது.

பெங்களூரு, 

ஆந்திர மாநிலம் இந்துப்பூரை சேர்ந்தவர் பாலாஜி. இவர், பெங்களூரு எலகங்கா அருகே வசித்து வந்தார். கடந்த 6-ந் தேதி எலகங்கா அருகே கோகிலு கிராஸ் பகுதியில் மர்மநபர்களால் பாலாஜி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து எலகங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர். பின்னர் கடந்த 8-ந் தேதி கோகிலு கிராஸ் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு உடல் எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

போலீஸ் விசாரணையில், அந்த நபர் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணியை சேர்ந்த ரமேஷ் (வயது 30) என்று தெரியவந்தது. வேறு இடத்தில் வைத்து ரமேசை கொலை செய்துவிட்டு, அவரது உடலை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து எரித்தது தெரிந்தது. இதுகுறித்தும் எலகங்கா போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் பாலாஜி, ரமேஷ் ஆகிய 2 பேரின் கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதினார்கள். அந்த கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் பாலாஜி, ரமேசை கொலை செய்ததாக வயாலிகாவலை சேர்ந்த் சங்கர்(28), ஹெப்பாலை சேர்ந்த மஞ்சுநாத் (32) ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் 2 பேரும் பாலாஜியின் நண்பர்கள் ஆவார்கள். கடந்த 5-ந் தேதி இரவு மதுஅருந்துவதற்கு பாலாஜிடம் மஞ்சுநாத், சங்கர், மேலும் 2 பேர் பணம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் இல்லை என்று கூறிவிட்டார். பின்னர் பாலாஜி உள்ளிட்ட அனைவரும் மதுஅருந்தி உள்ளனர். அப்போது குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அவர்கள், பாலாஜியை கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கிறார்கள். இதனை ரமேஷ் நேரில் பார்த்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மஞ்சுநாத், சங்கர் உள்பட 4 பேரும், தங்களை காட்டி கொடுத்து விடுவார் என்று கருதி ரமேசையும் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். அதன்பிறகு, அவரது உடலை கோகிலு கிராஸ் அருகே வைத்து எரித்தது தெரியவந்துள்ளது. கைதான 2 பேர் மீதும் எலகங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

Next Story