மராட்டியத்தில் 15-ந் தேதி முதல் புதிய கல்வியாண்டு: இ-கற்றல் முறையில் மாணவர்களுக்கு பாடம் - மந்திரி வர்ஷா கெய்க்வாட் தகவல்


மராட்டியத்தில் 15-ந் தேதி முதல் புதிய கல்வியாண்டு: இ-கற்றல் முறையில் மாணவர்களுக்கு பாடம் - மந்திரி வர்ஷா கெய்க்வாட் தகவல்
x
தினத்தந்தி 30 May 2020 4:45 AM IST (Updated: 30 May 2020 4:37 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் வருகிற 15-ந் தேதி முதல் புதிய கல்வியாண்டை தொடங்கி, இ-கற்றல் முறையில் பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படும் என்று மந்திரி வர்ஷா கெய்க்வாட் கூறினார்.

மும்பை, 

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளை திறப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. நாட்டில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மராட்டியத்தில் ஊரடங்கால் மூடப்பட்ட பள்ளிகளில் பெரும்பாலானவை தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்றப்பட்டு உள்ளன.

கொரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்களும் உள்ளனர். இந்த நிலையில், அடுத்த மாதம் (ஜூன்) 15-ந் தேதி முதல் இ-கற்றல் முறை மூலம் பள்ளிகளுக்கான புதிய கல்வியாண்டை தொடங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மாநில பள்ளிக்கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் கூறியதாவது:-

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுக்கிறது. அதே நேரத்தில் கல்வியாண்டு தாமதமாகி விட நாங்கள் விரும்பவில்லை. இந்த பிரச்சினையில் இருந்து முன்னோக்கி செல்வதற்கான தீர்வை கண்டறிய பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி வருகிறேன்.

பெற்றோர்களின் நம்பிக்கையை பெற்ற பின்னர் தான் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும். அதுவரை நாங்கள் இ-கற்றல் முறையை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இணையதள இணைப்பு சிக்கல்களை தீர்ப்பது குறித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். பல கிராமங்களில் ஆண்ட்ராய்டு போன்களின் பயன்பாடு குறைவாக உள்ளது.

பள்ளிக் கல்விக்காக தூர்தர்சன் சேனல்களை பயன்படுத்தும்படி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதி உள்ளேன். மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் ஆடியோ மற்றும் வீடியோ பாடத்திட்டங்களை தயாரித்து உள்ளது.

தூர்தர்ஷன் நேஷனல் சேனலின் கீழ் வரும் 2 சேனல்களில் குழந்தைகளின் பாடங்களை ஒளிபரப்பு செய்ய தினசரி 12 மணிநேரமும், வானொலியில் தினசரி 2 மணி நேரமும் ஒதுக்கும்படி கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story