பலத்த காற்றுடன் மழை:; 20 வீடுகள், பயிர்கள் சேதம்; மின்கம்பங்கள் முறிந்து மின்தடை
திருச்செங்கோடு அருகே, பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு 20 வீடுகள், பயிர்கள் சேதம் அடைந்தன. மின்கம்பங்கள் முறிந்து மின்தடை ஏற்பட்டுள்ளது.
எலச்சிபாளையம்,
திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம், பள்ளி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்று, இடி-மின்னலுடன் மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இந்நிலையில் திருச்செங்கோடு அருகே சிறுமொளசி கிராமம், வேட்டுவபாளையம் பகுதிகளில் வீசிய சூறாவளி காற்றால் அப்பகுதியில் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் மற்றும் ஓட்டு வீடுகள் முற்றிலும் சேதமாகின. அப்பகுதியில் இயங்கி வந்த கோழிப்பண்ணைகள் முற்றிலும் சேதமாகின. மேலும் பல ஏக்கர் பரப்பில் பயிரிட்டிருந்த கரும்பு, வாழை, சோளப்பயிர்களும் முற்றிலும் சேதமாகின. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதேபோல 10-ம் மேற்பட்ட மின்கம்பங்கள் முறிந்து சாய்ந்ததால் இப்பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்து மின்கம்பத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பரமத்தி, பொத்தனூர், பாலப்பட்டி, கபிலர்மலை, ஜேடர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பகுதிகளில் மின்சாரம் சிறிது நேரம் துண்டிக்கப்பட்டது.
நல்லியாம்பாளையம், பாண்டமங்கலம் மற்றும் பொத்தனூர் பகுதியில் மின்னல் தாக்கியதில் 3 தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்து சேதமாகின. தகவலறிந்து சம்பவ இடங்களுக்கு வந்த கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
Related Tags :
Next Story