கோவையில் கொட்டி தீர்த்த கோடை மழை 3 மாதங்களில் 170.5 மி.மீ. பெய்துள்ளது


கோவையில் கொட்டி தீர்த்த கோடை மழை 3 மாதங்களில் 170.5 மி.மீ. பெய்துள்ளது
x
தினத்தந்தி 30 May 2020 7:56 AM IST (Updated: 30 May 2020 7:56 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் இந்த ஆண்டு கோடை மழை 3 மாதங்களில் 170.5 மி.மீ. அளவுக்கு பெய்து உள்ளது. இது சராசரி மழை அளவை விட அதிகம் என்று கோவை வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் தெரிவித்து உள்ளார்.

மேட்டுப்பாளையம்,

கோவையில் ஒவ்வொரு ஆண்டும் தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவமழை பெய்கிறது. இதில் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழையும் பெய்கிறது. இதுதவிர மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் கோடை மழை பெய்கிறது.

இந்த நிலையில் கோவையில் கோடை மழை பல்வேறு இடங்களில் கொட்டி தீர்த்தது. நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் காந்திபார்க் பகுதியில் உள்ள வாழைக்காய் மண்டியில் சேறும் சகதியுமாக காணப்பட்டது.

மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு 9 மணியளவில் இடி மின்னல் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை காரணமாக மேட்டுப்பாளையம் எல்.எஸ். புரம் இரண்டாவது வீதியில் இருந்த வேப்ப மரம் ஒன்று வேரோடு ரோட்டின் குறுக்கே சாய்ந்து எதிரில் இருந்த வீட்டின் முதல் மாடியில் முன்பக்கத்தில் விழுந்தது. அப்போது யாரும் அந்தப்பகுதியில் இல்லாததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.

இதுகுறித்து தகவல் கிடைக்கப் பெற்றதும் தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் ரூபா, ரங்கராஜ் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ரோட்டில் குறுக்கே சாய்ந்து வீட்டின் மீது விழுந்து கிடந்த மரத்தின் கிளைகளை வெட்டியும் ரம்பத்தால் மரத்தை அறுத்தும் அப்புறப்படுத்தினார்கள். சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் ரோட்டின் குறுக்கே விழுந்து கிடந்த மரம் அகற்றப்பட்டது.

கோவைவையை பொறுத்தவரை இந்த ஆண்டு கோடை மழை கடந்த 3 மாதங்களில் 170.5 மில்லி மீட்டர் அளவுக்கு பெய்து உள்ளது. இதுகுறித்து கோவை வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ராமநாதன் கூறியதாவது:-

சராசரி மழை அளவைவிட அதிகம்

சராசரி மழை அளவு என்பது கடந்த 30 ஆண்டுகளில் பெய்த மழை அளவை கருத்தில் கொண்டு கணக்கீடு செய்யப்படுகிறது. இதன்படி கோவையில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் 137 மி.மீ. அளவுக்கு சராசரி மழை பெய்ய வேண்டும். ஆனால் இந்த ஆண்டு சராசரி மழை அளவை தாண்டி 170.5 மி.மீ. என்ற அளவுக்கு பெய்து உள்ளது. இது சராசரி மழை அளவை விட 33.5 மி.மீ. அதிகமாகும்.

இதில் மார்ச் மாதத்தில் 46 மி.மீ. மழையும், ஏப்ரல் மாதத்தில் 57 மி.மீ. மழையும், மே மாதத்தில் தற்போது வரை 67.5 மி.மீ. மழை என 3 மாதங்களில் 170.5 மி.மீ. மழை கொட்டி தீர்த்து உள்ளது. மேலும் மார்ச் மாதத்தில் 2 நாட்கள், ஏப்ரல் மாதத்தில் 3 நாட்கள், மே மாதத்தில் 4 நாட்கள் என மொத்தம் 9 நாட்கள் நமக்கு மழை கிடைத்து உள்ளது. கோவையில் நாளை (இன்று) மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கோவையில் இன்னும் தென் மேற்கு பருவமழை தொடங்கவில்லை. அடுத்த வாரம் முதல் தென்மேற்கு பருவமழை கோவையில் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சராசரி அளவை தாண்டி பெய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம்:-

அன்னூர் -29.மி.மீ.

விமானநிலையம் - 35 மி.மீ.

மேட்டுப்பாளையம் -20மி.மீ.

சிங்கோனா -11 மி.மீ.

வால்பாறை பி.ஏ.பி. - 59 மி.மீ.

வால்பாறை தாலுகா -58 மி.மீ.

சோலையார் -12 மி.மீ.

ஆழியார் -3 மி.மீ.

சூலுர் -50.2 மி.மீ.

பொள்ளாச்சி -3.4 மி.மீ.

கோவை தெற்கு -19 மி.மீ.

பெரியநாயக்கன்பாளையம்- 17.6 மி.மீ.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 28.5 மி.மீ.

Next Story