திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் ஊரடங்கால் நசுங்கிய பாத்திர உற்பத்தி


திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் ஊரடங்கால் நசுங்கிய பாத்திர உற்பத்தி
x
தினத்தந்தி 30 May 2020 10:57 PM GMT (Updated: 30 May 2020 10:57 PM GMT)

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் ஊரடங்கால் பாத்திர உற்பத்தி நசுங்கி போனது.

திருச்சி, 

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் ஊரடங்கால் பாத்திர உற்பத்தி நசுங்கி போனது.

அலுமினிய பாத்திர உற்பத்தி

இன்று வீட்டுக்கு வீடு சமையலுக்கு குக்கர் மற்றும் சில்வர் பாத்திரங்கள் வந்து விட்டாலும், இன்னமும் புழக்கத்தில் உள்ளது அலுமினிய பாத்திரங்களே. வசதியானவர்கள் சில்வர் உள்ளிட்ட பாத்திரங்களுக்கு மாறிப்போனாலும் ஏழை, எளியவர்களின் வீடுகளில் அலங்கரிப்பது அலுமினிய பாத்திரங்கள்தான்.

எளிதில் சூடாகக்கூடிய இந்த பாத்திரங்கள் சோறு சமைக்கவும், குழம்பு வைக்கவும் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது அவை நசுங்கி போனாலும் வீணாக விடாமல் அவற்றை விறகு அடுப்புகளில் வெந்நீர் போடவும், பெரிய அண்டாக்களில் பிரியாணி உள்ளிட்டவை செய்யவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சங்கிலியாண்டபுரம்

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் பல ஆண்டுகளாக அலுமினிய பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருப்பதால் தொழிற்கூடங்களும், பாத்திரங்களும் விற்பனை செய்யும் கடைகளும் மூடப்பட்டு விட்டன. ஏற்கனவே, உற்பத்தி செய்த பாத்திரங்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் தேக்கம் அடைந்துள்ளன.

இதனால், அவற்றை விற்பனை செய்ய முடியாமலும், புதிதாக பாத்திரங்களை உற்பத்தி செய்ய முடியாமலும் தொழில் நசுங்கி போனது. தற்போது ஊரடங்கில் தளர்வு கொடுக்கப்பட்டதால் படிப்படியாக பாத்திரக்கடைகளும், உற்பத்தி கூடங்களும் திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும், போக்கு வரத்து வசதி இல்லை என்பதால் தொழில் படுத்தே கிடப்பதாக உற்பத்தியாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இது தொடர்பாக சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த அலுமினிய பாத்திர உற்பத்தியாளர் கூறியதாவது:-

பரிதவிப்பு

அலுமினிய பாத்திரங்களுக்கென்று ஒரு காலத்தில் பெரிய அளவில் மவுசு இருந்தது. தற்போது புதிய தொழில்நுட்பங்களில் பல்வேறு வடிவங்களில் குக்கர் உள்ளிட்ட சமையல் பாத்திரங்கள் வரத்து அதிகமாகி விட்டது. கடந்த 2 மாதங்களாக ஊரடங்கால் முடங்கிபோன தொழிலை மீண்டும் முன்புபோல செய்வதென்பது முடியாது.

மவுசு குறைந்தாலும் பெரும்பாலான வீடுகளில் சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள்தான் பயன்பாட்டில் உள்ளது. சங்கிலியாண்டபுரம் உற்பத்தி கூடங்களில் இருந்து சோறு பொங்கும் பாத்திரம், குளிக்க பயன்படுத்தும் அண்டா, இட்லி கொப்பரை உள்ளிட்டவைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்கிறோம். ஜி.எஸ்.டி. 12 சதவீதம் முதல் 18 சதவீதம்வரை பிடித்தம் செய்வதால் பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

ஊரடங்கால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பாத்திரங்கள் விற்க முடியாமல் முடங்கிபோய் விட்டது. மேலும் உற்பத்தி பொருளுக்கு வாங்கிய கடனையும் அடைக்க முடியவில்லை. கடை வாடகை, மின்சார கட்டணம் ஆகியவற்றை செலுத்த முடியாமலும் பரிதவித்து வருகிறோம். மேலும் வாகன போக்குவரத்து வசதி இல்லாததால் பாத்திரங்களை ஆர்டர் கொடுக்கவும் நிறுவனங்கள் முன்வருவதில்லை. எனவே, ஏதாவது ஒருவகையில் சலுகை அளித்தால் மட்டுமே மீண்டும் பாத்திரங்கள் உற்பத்தியை நிலைநிறுத்த முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story