நாசிக்கில் ஊருக்குள் புகுந்த சிறுத்தைப்புலி 2 பேரை கடித்து விட்டு தப்பியோடியது


நாசிக்கில் ஊருக்குள் புகுந்த சிறுத்தைப்புலி 2 பேரை கடித்து விட்டு தப்பியோடியது
x
தினத்தந்தி 31 May 2020 12:39 AM GMT (Updated: 31 May 2020 12:39 AM GMT)

நாசிக்கில் ஊருக்குள் புகுந்த சிறுத்தைப்புலி 2 பேரை கடித்து விட்டு தப்பியோடியது.

நாசிக்,

நாசிக்கில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் இருந்து அவ்வப்போது சிறுத்தைப்புலிகள் அருகில் உள்ள ஊர்களுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்தநிலையில், நேற்று அதிகாலை காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தைப்புலி ஒன்று நாசிக் இந்திராநகர் குடியிருப்பு பகுதியில் புகுந்து விட்டது.

அதிகாலை 5.30 மணியளவில் அங்குள்ள ராஜ்சாரதி ஹவுசிங் சொசைட்டி கட்டிட வளாகத்துக்குள் நுழைந்தது. அப்போது அந்த கட்டிடத்தின் மாடிப்படியில் நின்று கொண்டிருந்த முதியவர் சிறுத்தைப்புலியை பார்த்ததும் பயத்தில் அலறினார். உடனே அந்த சிறுத்தைப்புலி முதியவர் மீது பாய்ந்து தாக்கியது.

பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள சாலையில் குதித்து தப்பியோடியது. அப்போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவர் மீதும் சீறி பாய்ந்து கடித்து விட்டு ஓடி விட்டது. இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. நல்லவேளையாக முதியவர் உள்பட 2 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்கள். சிறுத்தைப்புலி புகுந்தது குறித்து உடனடியாக போலீஸ் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் அந்த சிறுத்தைப்புலி எங்கேயோ ஓடி மறைந்து விட்டது. பல மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்தியும் அந்த சிறுத்தைப்புலியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்திரா நகருக்குள் நுழைவதற்கு முன் அந்த சிறுத்தைப்புலி மும்பை நாக்கா, திட்கோகாலனி பகுதியில் உலாவியதாகவும் கூறப்படுகிறது. குடியிருப்பு பகுதியில் புகுந்து சிறுத்தைப்புலி தாக்கிய சம்பவத்தால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

Next Story