பொது இடங்களில் சிகரெட் புகைப்பது, எச்சில் துப்பினால் 6 மாதம் சிறை மராட்டிய அரசு அறிவிப்பு


பொது இடங்களில் சிகரெட் புகைப்பது, எச்சில் துப்பினால் 6 மாதம் சிறை மராட்டிய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 31 May 2020 6:15 AM IST (Updated: 31 May 2020 6:15 AM IST)
t-max-icont-min-icon

பொது இடங்களில் எச்சில் துப்பினாலோ, சிகரெட் புகைத்தாலோ 6 மாதம் வரை சிறை செல்ல நேரிடும் என மாநில அரசு தகவல் தெரிவித்து உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் அதிதீவிரமாக பரவி வருகிறது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும்படி மாநில அரசு வலியுறுத்தி வருகிறது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மார்க்கெட் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்காக செல்லும் மும்பை வாசிகள் சமூக இடைவெளியை பின்பற்றும் படி அறிவுறுத்தி வருகிறோம். இந்தநிலையில் சிலர் பொது இடங்களில் எச்சில் துப்பி அசிங்கப்படுத்தி வருகிறார்கள்.

மேலும் சிலர் பொதுஇடங்களில் சிகரெட் புகைத்து வருகிறார்கள். இதன் மூலமாகவும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இனி பொது இடங்களில் எச்சில் துப்பினாலோ அல்லது சிகரெட் புகைத்தாலோ குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 2 வருடம் வரை சிறை செல்ல நேரிடும் என மாநில அரசு அறிவித்துள்ளது. குற்றத்தின் தன்மையை பொருட்டு அபராதம் விதிக்கப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே மாநில அரசு பொதுஇடங்களில் எச்சில் துப்புவதற்கும் அல்லது குப்பை கொட்டுவதற்கும் தடை விதித்து உள்ளது. மேலும் அவ்வாறு செய்பவர்களுக்கு தலா ரூ.1000 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story