ஆதிதிராவிடர் நலத்துறை சார்பிலான நலத்திட்டப்பணிகளை அமைச்சர் கந்தசாமி ஆய்வு


ஆதிதிராவிடர் நலத்துறை சார்பிலான நலத்திட்டப்பணிகளை அமைச்சர் கந்தசாமி ஆய்வு
x
தினத்தந்தி 31 May 2020 7:07 AM IST (Updated: 31 May 2020 7:07 AM IST)
t-max-icont-min-icon

கிருமாம்பாக்கத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நடக்கும் நலத்திட்டப்பணிகளை அமைச்சர் கந்தசாமி ஆய்வு செய்தார்.

பாகூர்,

புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் மேம்பாட்டுக்கழகம் சார்பில் கிருமாம்பாக்கம் பேட் பகுதியில் அம்பேத்கர் நுழைவு வாயில் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை அமைச்சர் கந்தசாமி தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் யஸ்வந்தையா, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகர், தாசில்தார் குமரன் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

கிருமாம்பாக்கம் பேட் அம்பேத்கர் நுழைவுவாயில் பணிகளை அமைச்சர் கந்தசாமி பார்வையிட்டார். அப்போது புதிய குடியிருப்பில் வசித்து வரும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடிநீர், வாய்க்கால் வசதிகளை செயல்படுத்த வேண்டும் என்று அமைச்சரிடம் முறையிட்டனர். அந்த பகுதிக்கு பொதுப்பணித்துறை, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் குடிநீர் வசதி செய்து தர ஏற்பாடு செய்தார்.

கந்தன்பேட் கிராமத்தில் இலவச மனைப்பட்டா கொடுப்பதற்கான நிலம் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த கிராம மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்படாமல் உள்ளது. சுடுகாடு இல்லாததால் தனியார் இடத்தை பயன்படுத்தி வருவதாக புகார் தெரிவித்தனர். அப்போது அமைச்சர் அதிகாரிகளிடம் பேசி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கிராம மக்களிடம் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது ஆதிதிராவிடர் மேம்பாட்டுக்கழக உதவி பொறியாளர் சாம்பசிவம், இளநிலை பொறியாளர் ஜெயமுகுந்தன், பொதுப் பணித்துறை குடிநீர் பிரிவு செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story