கனமழை, தண்ணீர் திறப்பு: வைகை ஆற்று நீரால் நிரம்பி வரும் தெப்பக்குளம்


கனமழை, தண்ணீர் திறப்பு: வைகை ஆற்று நீரால் நிரம்பி வரும் தெப்பக்குளம்
x
தினத்தந்தி 31 May 2020 7:42 AM IST (Updated: 31 May 2020 7:42 AM IST)
t-max-icont-min-icon

கனமழை மற்றும் நீர் திறப்பு காரணமாக வைகை ஆற்றில் வரும் நீரால் மதுரை தெப்பக்குளம் நிரம்பி வருகிறது.

மதுரை, 

கனமழை மற்றும் நீர் திறப்பு காரணமாக வைகை ஆற்றில் வரும் நீரால் மதுரை தெப்பக்குளம் நிரம்பி வருகிறது.

தெப்பக்குளம்

மதுரையில் உள்ள பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக திருமலை நாயக்கர் மகால் திகழ்கிறது, மகால் கட்டுவதற்காக மண் எடுக்கப்பட்ட இடமே தற்போதுள்ள தெப்பக்குளம் என கூறப்படுகிறது. இந்த குளத்தில் ஆண்டுதோறும் தை மாதத்தில் மீனாட்சி அம்மன் கோவில் தெப்ப திருவிழா சிறப்பாக நடைபெறும். இதற்காக அந்த நேரத்தில் வைகை ஆற்றில் வரும் நீரை கால்வாய் மூலம் திருப்பி தெப்பக்குளத்தை நிரப்புவது வழக்கம்.

ஆனால் காலபோக்கில் கால்வாய் ஆக்கிரமிப்பால் தண்ணீர் நிரப்ப முடியாமல், தெப்பக்குளம் வறண்டு காணப்பட்டது. இந்தநிலையில் கடந்த ஆண்டு வைகை ஆற்றிலிருந்து தெப்பக்குளம் செல்லும் கால்வால் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பழைய முறையில் வைகை ஆற்று தண்ணீர் கால்வாய் மூலம் தெப்பக்குளத்திற்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் சில நாட்களில் தெப்பக்குளம் நிறைந்து மதுரை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

நிரம்பி வருகிறது

தற்போது குடிநீருக்காக வைகை அணையில் திறந்து விடபட்ட தண்ணீர் மதுரை வைகை ஆற்றுக்கு வந்தடைந்தது. மேலும் மதுரையில் பலத்த மழை பெய்ததால் வைகையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கால்வாய் மூலம் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் சென்றதால் தெப்பக்குளமும் வேகமாக நிரம்பி வருகிறது. தெப்பக்குளம் நிரம்பி வருவதால் அப்பகுதி முழுவதும் இனி நிலத்தடி நீர் மற்றும் குடிநீருக்கு எந்த பஞ்சமும் இருக்காது என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.

இதேபோன்று மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து நீர் நிலைகளுக்கும் வரத்து கால்வாய்கள் உள்ளது. அந்த கால்வாய்கள் அனைத்தும் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டும், மேடான பகுதியாக மாறியுள்ளது. எனவே அதிகாரிகள் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளுக்கு நீரை கொண்டு செல்வதன் மூலம் மதுரை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியும். எனவே இதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story