மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவு: துறைமுகத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு
மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதையொட்டி கடலூர் துறைமுக பகுதியில் மீன்வளத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
கடலூர் முதுநகர்,
மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதையொட்டி கடலூர் துறைமுக பகுதியில் மீன்வளத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
மீன் விற்பனை
கடலூர் துறைமுகத்தில் இருந்து தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, சொத்திக்குப்பம், சோனாங்குப்பம், அக்கரைக்கோரி, ராசாப்பேட்டை, சித்திரைப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். அவ்வாறு பிடித்து வரும் மீன்கள் கடலூர் துறைமுக பகுதியில் வைத்து விற்பனை செய்யப்படும்.
அங்கு வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் முகாமிட்டு மீன்களை அதிகளவில் வாங்கி, ஐஸ் பெட்டிகளில் அடைத்து லாரிகள் மூலம் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வார்கள்.
தடைக்காலம்
தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இது தவிர ஏப்ரல் 15-ந் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து வருகிறது. வழக்கமாக ஜூன் 15-ந் தேதி வரை 61 நாட்கள் தடைக்காலம் அமலில் இருக்கும். ஆனால் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் நலன் கருதி தமிழக அரசு மீன்பிடி தடைக்காலங்களுக்கான நாட்களை குறைத்துள்ளது. அதாவது 15 நாட்கள் குறைத்து ஜூன் 1-ந் தேதி(அதாவது நாளை) முதல் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதிகாரிகள் ஆய்வு
மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் (ஞாயிற்றுக் கிழமை) முடிவடைவதை யொட்டி கடலூர் கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவின்பேரில் மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன் தலைமையில் உதவி இயக்குனர் ரம்யா லட்சுமி மற்றும் அதிகாரிகள் 6 குழுக்களாக பிரிந்து கடலூர் துறைமுக பகுதி மற்றும் பரங்கிப்பேட்டையில் உள்ள மீன்பிடி படகுகளை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தமிழ்நாடு மீன்வளத்துறை சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அளவுக்கு ஏற்ற என்ஜின் திறன் (அதாவது 240 குதிரை திறன் கொண்டது) மற்றும் படகுகளின் அளவு சரியாக இருக்கிறதா என ஆய்வு செய்தனர். அதாவது 15 மீட்டர் நீளம் அல்லது 24 மீட்டர் நீளம் கொண்ட 2 வகையான விசைப்படகுகளையும் சோதனை மேற்கொண்டனர்.
சுழற்சி முறையில் விற்பனை
மேலும் சமூக இடைவெளியுடன் மீன் விற்பது குறித்து மீனவர்களுக்கு அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர். அதன்படி 24 மீட்டர் நீளமுடைய பெரிய விசைப்படகுகளில் கடலில் 4 முதல் 5 நாட்கள் தங்கியிருந்து மீன்பிடித்து வரும் மீனவர்கள் அதிகாலை 4 மணி முதல் காலை 9 மணி வரை அவர்கள் பிடித்து வரும் மீன்களை கடலூர் துறைமுகத்தில் வைத்து விற்கலாம் என்றும், 15 மீட்டர் நீளமுடைய விசைப்படகுகளில் அதிகாலையில் கடலுக்கு சென்று மீன்பிடித்து விட்டு அன்று மதியம் திரும்பும் மீனவர்கள், அந்த மீன்களை மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை சமூக இடைவெளியை கடைபிடித்து விற்கலாம் என்றும் அதிகாரிகள் அறிவுரை வழங்கினர். இது தவிர அனைத்து மீனவர்களும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும், இதை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story