அரசு அலுவலர்களுக்காக இயக்கப்படும் மாநகர பஸ்களில் மின்னணு பண பரிவர்த்தனை: முதற்கட்டமாக 2 பஸ்களில் அமல்படுத்தப்பட்டது


அரசு அலுவலர்களுக்காக இயக்கப்படும் மாநகர பஸ்களில் மின்னணு பண பரிவர்த்தனை: முதற்கட்டமாக 2 பஸ்களில் அமல்படுத்தப்பட்டது
x
தினத்தந்தி 3 Jun 2020 6:07 AM IST (Updated: 3 Jun 2020 6:07 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்றை தடுக்க சோதனை முயற்சியாக சென்னையில் அரசு அலுவலர்களுக்காக இயக்கப்படும் மாநகர பஸ்களில் முதற்கட்டமாக 2 பஸ்களில் மின்னணு பண பரிவர்த்தனை அமல்படுத்தப்பட்டு உள்ளது.

சென்னை, 

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொது போக்குவரத்து முடக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு பணியாளர்கள் சென்றுவர ஏதுவாக மாநகர் முழுவதும் 200 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நகரின் பல்வேறு வழித்தடங்களில் இருந்தும், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பிற மாவட்ட எல்லைகளில் இருந்தும் தலைமை செயலகம், எழிலகம், குறளகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு ஊழியர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.

இந்த பஸ்களில் டிக்கெட் வாங்குதல் மற்றும் பணம் பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் கொரோனா தொற்று பரவலாம் என்று பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மின்னணு பண பரிவர்த்தனையை, சோதனை முறையில் அமல்படுத்த போக்குவரத்துத்துறை முடிவு செய்தது.

அதனைத்தொடர்ந்து சென்னை தியாகராயநகர், சைதாப்பேட்டையில் இருந்து தலைமை செயலகம் நோக்கி இயக்கப்படும் பஸ்களில் நேற்று முதல் மின்னணு பண பரிவர்த்தனை முறை அமல்படுத்தப்பட்டது. இதற்காக பஸ்களில் கியூஆர் கோடுகள் இடப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. பஸ்சின் கண்டக்டரிடமும் ஒரு கருவி வழங்கப்பட்டது.

இதன்மூலம் பஸ்சில் உள்ள கியூஆர் கோட்டை செல்போன் வழியாக ஸ்கேன் செய்து ‘கூகுள் பே‘, ‘போன் பே‘ , ‘பே டி.எம்‘ உள்ளிட்டவை வாயிலாக உரிய டிக்கெட் கட்டணத்தை பயணிகள் செலுத்தினர். டிக்கெட் பணம் செலுத்தியதின் அடையாளமாக, கண்டக்டரிடம் இருக்கும் கருவியில் ‘இந்த பயணி தனது டிக்கெட் தொகையை செலுத்து விட்டார்‘, என்ற குரலும் ஒலித்து உறுதி செய்கிறது. பயணியின் செல்போனுக்கு டிக்கெட் சென்றடைகிறது. இந்த மின்னணு பண பரிவர்த்தனையை பயணிகள் ஆர்வமுடன் நேற்று பயன்படுத்தியதை பார்க்கமுடிந்தது.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், “மின்னணு பண பரிவர்த்தனை மூலம் பணம், டிக்கெட் கையாளுவது தடுக்கப்படுகிறது. தற்போதைய சூழலில் இது நல்ல திட்டம். விரைவில் அனைத்து பஸ்களிலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்“, என்று தெரிவித்தனர்.

போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறுகையில், “முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் 2 பஸ்களில் மட்டும் மின்னணு பண பரிவர்த்தனை கையாளப்படுகிறது.

பயணிகள் வரவேற்பை தொடர்ந்து இத்திட்டத்தை பிற பஸ்களிலும் விரிவுபடுத்த ஆலோசனை நடத்தப்படும்“, என்றனர்.


Next Story