சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற மினிலாரி உரிமையாளர் கைது


சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற மினிலாரி உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 3 Jun 2020 5:25 AM GMT (Updated: 3 Jun 2020 5:25 AM GMT)

மணல் கடத்தலை தடுக்க சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற மினிலாரி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

பண்ருட்டி,

பண்ருட்டி அடுத்த கருக்கை கெடிலம் ஆற்றில் இருந்து சிலர் வாகனங்களில் மணலை கடத்திச் சென்று விற்பனை செய்து வருவதாக காடாம்புலியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் கருக்கை கெடிலம் ஆற்றுப்பகுதியில் மணல் கடத்தல் நடைபெறுகிறதா? என தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கெடிலம் ஆற்று பாதை வழியாக மணல் ஏற்றி வந்த ஒரு மினிலாரியை போலீசார் தடுத்து நிறுத்தி, அதனை ஓட்டி வந்தவரிடம் உரிய ஆவணங்களுடன் மணல் எடுத்துச் செல்லப்படுகிறதா? என விசாரணை நடத்தினர். அப்போது ஆத்திரமடைந்த மினிலாரியை ஓட்டி வந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமாரை ஆபாசமாக திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்ததோடு, அவரை மண்வெட்டியால் வெட்டி கொல்ல முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இதில் சுதாரித்துக் கொண்ட ஆனந்தகுமார் சக போலீசார் உதவியுடன் அந்த நபரை பிடித்து மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் மேலிருப்பு பகுதியை சேர்ந்த கண்ணுக்குட்டி என்ற வெங்கட்ராமன்(வயது 57) என்பதும், தனக்கு சொந்தமான மினிலாரியில் கெடிலம் ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்ததை தடுத்த சப்-இன்ஸ்பெக்ரை கொல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பண்ருட்டி கிளை சிறையில் அடைத்தனர். மேலும் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட மினிலாரி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story