10 ஆயிரம் கிலோ மீட்டர் மாவட்ட சாலைகளை மாநில நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்த முடிவு - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு


10 ஆயிரம் கிலோ மீட்டர் மாவட்ட சாலைகளை மாநில நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்த முடிவு - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Jun 2020 4:45 AM IST (Updated: 4 Jun 2020 2:02 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் மாவட்ட சாலைகளை மாநில நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பொதுப்பணி, துறைமுகம், நீர்-போக்குவரத்துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் அந்த துறையை நிர்வகிக்கும் துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள், தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடியூரப்பா பேசியதாவது:-

கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள், மேம்பாலங்களை மறுசீரமைக்கும் பணிகளை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். அரசு துறையின் சில அலுவலகங்களை பெலகாவியில் உள்ள சுவர்ண சவுதாவுக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும்.

அடுத்த முறை இந்த துறை குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தும்போது, இதுகுறித்து அதிகாரிகள் என்னிடம், அலுவலகங்களை மாற்றிய விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். பெலகாவிக்கு செல்லும்போது, சுவர்ண சவுதாவிற்கு நேரில் சென்று ஆய்வு செய்வேன். புதிதாக என்ஜினீயர்களை நியமனம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் வேலையின்றி இருக்கும் என்ஜினீயர்களை பயிற்சி என்ஜினீயர்களாக நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவமொக்காவில் புதிதாக விமான நிலையம் அமைக்கும் பணிகளை ஓராண்டு காலத்திற்குள் முடிக்க வேண்டும். அதே நேரத்தில் பணிகளின் தரத்தில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது. விஜயாப்புராவில் விமான நிலையம் அமைக்க நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த பணிகளையும் தொடங்க வேண்டும்.

கர்நாடகத்தில் 10 ஆயிரத்து 110 கிலோ மீட்டர் மாவட்ட சாலைகள் மாநில நெடுஞ்சாலைகளாகவும், 1,650 கிலோ மீட்டர் கிராமப்புற சாலைகள் மாவட்ட சாலைகளாகவும் தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏரி, பள்ளம் மற்றும் ஆற்று படுகையில் மண்ணை எடுத்து சாலை கட்டமைப்பு பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

கர்நாடகத்தில் 4,813 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் ரூ.30 ஆயிரத்து 675 கோடியில் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, கால்நடைகளின் தண்ணீர் தாகத்தை பூர்த்தி செய்ய ஒரு மீட்டருக்கு தடுப்பு சுவரை கட்டி தொட்டிகளை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு எடியூரப்பா பேசினர்.

இந்த கூட்டத்தில் துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் பேசும்போது, “கர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள், மேம்பாலங்களை சரிசெய்ய ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. மொத்தம் 1,800 சாலைகள் சேதம் அடைந்தன. அதில் 1,700 சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. மேம்பாலங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன“ என்றார்.

Next Story