கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் மக்கள் வாழ்வாதார மீட்பு நடவடிக்கை குழு மனு


கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும்  மக்கள் வாழ்வாதார மீட்பு நடவடிக்கை குழு மனு
x
தினத்தந்தி 4 Jun 2020 6:14 AM IST (Updated: 4 Jun 2020 6:14 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று மக்கள் வாழ்வாதார மீட்பு நடவடிக்கை குழு மனு அளித்துள்ளது.

கொடைக்கானல், 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் வெளியூரை சேர்ந்தவர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை முழுமையாக கடைபிடித்ததால் கொரோனா இல்லாத பகுதியாக கொடைக்கானல் விளங்கி வருகிறது. ஆனால் சுற்றுலா தொழிலை நம்பி வாழும் கொடைக்கானல் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்வாதாரத்தை இழந்து அவர்கள் தவித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து கொடைக்கானல் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காக கொடைக்கானலில் உள்ள அனைத்து சங்கத்தினரும் ஒருங்கிணைந்து மக்கள் வாழ்வாதார மீட்பு நடவடிக்கை குழுவை ஏற்படுத்தியுள்ளனர். இந்த குழுவின் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே அந்த குழுவினர், கொடைக்கானல் ஆர்.டி.ஓ. சிவக்குமாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், கொடைக்கானலில் உள்ள அமைப்புகள், தொழிலாளர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வழங்கியும், தங்கும் விடுதிகளுக்கான சிறப்பு விதிமுறைகளை வரைவு செய்தும் படிப்படியாக சுற்றுலா பயணிகளை மிகக்குறைந்த எண்ணிக்கையில் நகருக்குள் அனுமதிக்க வேண்டும். அப்போது தான் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பொதுமக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முடியும். மேலும் நகரில் உள்ள தங்கும் விடுதிகளின் அறைகளில் குறிப்பிட்ட அறைகளுக்கு மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். பச்சை மண்டலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகளை மட்டுமே சூழ்நிலைக்கு தகுந்தவாறு அனுமதிக்க அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்திருந்தனர்.

மேலும் இந்த கோரிக்கை மனு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

Next Story