திண்டுக்கல்லில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்துக்கு சிறப்பு ரெயிலில் கல்லூரி மாணவர்கள் உள்பட 618 பேர் பயணம்


திண்டுக்கல்லில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்துக்கு  சிறப்பு ரெயிலில் கல்லூரி மாணவர்கள் உள்பட 618 பேர் பயணம்
x
தினத்தந்தி 4 Jun 2020 6:45 AM IST (Updated: 4 Jun 2020 6:45 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்துக்கு சிறப்பு ரெயிலில் கல்லூரி மாணவர்கள் உள்பட 618 பேர் நேற்று புறப்பட்டு சென்றனர்.

திண்டுக்கல், 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், தியேட்டர்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இந்த நிலையில் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பஸ், ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வெளிமாநிலங்களில் இருந்து திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கல்வி, வேலைக்காக வந்துவிட்டு ஊரடங்கால் தங்கள் ஊருக்கு திரும்பிச்செல்ல முடியாமல் தவிப்பவர்களை, சிறப்பு ரெயில்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

618 பேர் பயணம்

அந்த வகையில் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து திண்டுக்கல், திருச்சி, சேலம் உள்பட 8 ஊர்களுக்கு வேலை, கல்விக்காக வந்து, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 618 பேர் நேற்று சிறப்பு ரெயில் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த ரெயில், மதுரையில் இருந்து மதியம் 12.50 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல்லுக்கு மதியம் 2 மணிக்கு வந்தது.

முன்னதாக ரெயிலில் பயணம் செய்வதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 85 பேர், திருச்சி அருகே உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் 25 மாணவ-மாணவிகள் உள்பட 178 பேர், புதுக்கோட்டையில் இருந்து 51 பேர், அரியலூரில் இருந்து 35 பேர், சேலத்தில் இருந்து 35 பேர், நாமக்கல்லில் இருந்து 201 பேர், தஞ்சையில் இருந்து 20 பேர், திருவாரூரில் இருந்து 13 பேர் என மொத்தம் 618 பேர் அரசு பஸ்கள், பள்ளி வாகனங்கள் மூலம் திண்டுக்கல் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். அவர்களில் பலர் கைக்குழந்தையுடன் வந்திருந்தனர்.

புறப்பட்டு சென்றனர்

பின்னர் அவர்களுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு, கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அதையடுத்து அவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு ரெயில் நிலையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதையடுத்து ரெயிலில் பயணிகள் சமூக இடைவெளியுடனும், முக கவசம் அணிந்தும் பயணம் செய்ய வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர். பின்னர் மதியம் 2.30 மணிக்கு சிறப்பு ரெயில் ஜார்கண்ட் மாநிலம் நோக்கி புறப்பட்டு சென்றது. முன்னதாக அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் 2 வேளைக்கு சாப்பிடுவதற்காக சப்பாத்தி, குளிர்பானம், பிரட், பிஸ்கட் மற்றும் பச்சை காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

Next Story