அதிக அளவு பயணிகளுடன் பயணம்: அரசு பஸ்களில் விதிமுறைகள் முற்றிலும் புறக்கணிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் அரசு பஸ்களில் பயணத்தின்போது விதிமுறைகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டது.
விருதுநகர்,
5-வது ஊரடங்கு தொடங்கிய நிலையில் நேற்று முன்தினம் முதல் பஸ் போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. விருதுநகர் மாவட்டத்தில் 133 டவுன் பஸ்களும், 88 புறநகர் பஸ்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து தொடங்கிய முதல் நாளன்று போக்குவரத்து கழக மூத்த அதிகாரிகள் பஸ் நிலையத்துக்கே வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் 20 சதவீத பயணிகளே பயணம் செய்த நிலை நாள் முழுவதும் நீடித்தது. விதிமுறைப்படி காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே பஸ்கள் இயக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதால் கிராமங்களுக்கு செல்லும் பெரும்பாலான பஸ்கள் இரவு 7 மணிக்கே நிறுத்தப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் இயக்கப்பட்ட 221 பஸ்கள் மூலம் வருமானம் குறைந்ததாக கூறப்படும் நிலையில் நேற்று பஸ்களின் எண்ணிக்கை 192 ஆக குறைக்கப்பட்டது. 121 டவுன் பஸ்களும், 71 புறநகர் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. முக்கிய வழித்தடங்களில் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் பயணிகள் தவிப்புக்கு உள்ளாயினர்.
புறக்கணிப்பு
அரசு விதிமுறைப்படி 60 சதவீத பயணிகள் தான் பஸ்களில் அனுமதிக்கப்பட வேண்டும். மேலும் பஸ்களில் பயணம் செய்வோர் முக கவசம் அணிந்து இருப்பதை உறுதி செய்வதோடு, பஸ்களின் பின்புற வழியாக ஏறுவதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். பஸ்களின் உள்ளே சமூக இடைவெளிவிட்டு பயணிகள் அமர வேண்டும். போக்குவரத்து கழக ஊழியர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்பட வேண்டும். ஆனால் கிராமப்புறங்களுக்கு செல்லும் பஸ்களில் இந்த விதிமுறைகள் ஏதும் பின்பற்றப்படாமல் புறக்கணிக்கப்பட்டன. விருதுநகரில் இருந்து காரியாபட்டி, சிவகாசி, சாத்தூர் செல்லும் பஸ்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமான பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
கோரிக்கை
அதிலும் விருதுநகரில் இருந்து காரியாபட்டிக்கு சென்ற டவுன் பஸ்சில் வழக்கமாக அனுமதிக்கப்படும் பயணிகளின் எண்ணிக்கையை விட அதிக பயணிகள் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். பஸ்சில் அனைத்து இருக்கைகளிலும் பயணிகள் நெருக்கமாக அமர்ந்து இருந்தனர். 50 சதவீத பெண்கள் முக கவசம் அணியவில்லை. ஆனாலும் பஸ் ஊழியர்களோ, அலுவலர்களோ இதை கண்டுக்கொள்ளவில்லை. இது பற்றி ஆய்வு அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, டவுன் பஸ்சில் 84 பயணிகள் வழக்கமாக அனுமதிக்கப்படும் நிலையில் தற்போது 60 சதவீதம் தான் அனுமதிக்கப்பட்டுள்ளது என்றார். விதிமுறைகள் பற்றி கேட்டபோது அவர் அதற்கு பதில் அளிக்க தயக்கம் காட்டினார்.
மாவட்ட நிர்வாகம் விதிமுறைகளை மீறி பஸ்களை இயக்கினால் பஸ் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்து உள்ளது. ஆனால் விதிமுறைப்படி பஸ்கள் இயக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க அதிகாரிகள் யாரும் நியமிக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் அரசு விதித்த நிபந்தனைபடி பஸ்கள் இயக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு வசதியாக உரிய கண்காணிப்பு அதிகாரிகளை முக்கிய பஸ் நிலையங்களில் நியமிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story