கோவையில் இருந்து சேலத்துக்கு 160 கி.மீ. தூரம் நடந்து வந்த ஒடிசா தொழிலாளர்கள்


கோவையில் இருந்து சேலத்துக்கு 160 கி.மீ. தூரம் நடந்து வந்த ஒடிசா தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 5 Jun 2020 9:10 AM IST (Updated: 5 Jun 2020 9:10 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் இருந்து சேலத்துக்கு 160 கி.மீட்டர் தூரம் ஒடிசா தொழிலாளர்கள் நடந்து வந்தனர். அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம்,

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வடமாநில தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் பணிபுரிந்து வந்தனர். கொரோனா வைரஸ் ஊரடங்கால் பஸ், ரெயில் சேவை நிறுத்தப்பட்டதால் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும், உணவு கிடைக்காமலும் பரிதவித்து வருகின்றனர்.

இருந்த போதிலும் புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த ரெயில்களில் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் சென்று வருகின்றனர். அதேசமயம் சில தொழிலாளர்கள் வேலை இழப்பு, செலவுக்கு பணம் இல்லாத காரணத்தால் நடந்தே தங்களது சொந்த ஊருக்கு சென்று விட முடிவு செய்து நடந்து செல்வதை காணமுடிகிறது.

அதன்படி, கோவையில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 20 தொழிலாளர்கள் 160 கிலோ மீட்டர் தூரம் நடந்தே கோவையில் இருந்து நேற்று சேலத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களை சொந்த ஊருக்கு வாகனங்களில் அனுப்பி வைக்க கோரி சேலம் அண்ணா பூங்கா வழியாக கலெக்டர் அலுவலகத்துக்கு செல்ல முயன்றனர். அப்போது அங்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் அவர்கள் அனைவரும் செரி ரோட்டில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த அதிகாரிகள் ஒடிசா மாநில தொழிலாளர்களை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதா? அல்லது கோவைக்கு திருப்பி அனுப்புவதா? என்பது குறித்து ஆலோசணை நடத்தினர். மேலும், ஒடிசா மாநிலத்தில் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள்? அவர்களது பெயர் உள்ளிட்ட விவரத்தை அதிகாரிகள் சேகரித்தனர்.

இது குறித்து ஒடிசா மாநில தொழிலாளர்கள் கூறுகையில், கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நாங்கள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக எந்த வேலையும் இல்லாமல் பரிதவித்து வருகிறோம்.

செலவுக்கு பணம் இல்லாததால் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்து கோவையில் இருந்து சேலத்துக்கு வந்தோம். இங்கிருந்து எப்படி ஊருக்கு செல்வது என்பது தெரியவில்லை. இதனால் சேலம் மாவட்ட நிர்வாகம் எங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Next Story