விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் : கொரோனா நிவாரண உதவி வழங்கக்கோரிக்கை


கள்ளக்குறிச்சியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
x
கள்ளக்குறிச்சியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

கொரோனா நிவாரண உதவி வழங்கக்கோரி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம்,

கொரோனா நிவாரண உதவி வழங்கக்கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் விழுப்புரம் மாவட்டத்தில் 6 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் முறையாக பணி தொடங்க வேண்டும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.7,500 வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் அருகே கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் ராஜசேகர் தலைமை தாங்கினார். இதில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பழனி, குப்புசாமி, சுந்தரமூர்த்தி, ரவி, ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதேபோல் கண்டாச்சிபுரத்தில் வட்ட செயலாளர் ஏழுமலை தலைமையிலும், மணம்பூண்டியில் வட்ட செயலளர் ஏழுமலை தலைமையிலும், மேல்மலையனூரில் வட்ட செயலாளர் குமார் தலைமையிலும், விக்கிரவாண்டியில் ஒன்றிய செயலாளர் கலியமூர்த்தி தலைமையிலும், திருச்சிற்றம்பலம் கூட்டுசாலையில் மாவட்டக்குழு உறுப்பினர் அர்ஜூனன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கொரோனா நிவாரணமாக விவசாய தொழிலாளர்களுக்கு தலா ரூ. 7500 வீதம் மூன்று மாதங்களுக்கு வழங்கிட வேண்டும். அனைத்து கிராமங்களிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க ஒன்றிய அமைப்பாளர் வேலு தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகிகள், விவசாய தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முன்னதாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சிவேலுவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறி 50-க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்களை கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் செல்வராசு தலைமை தாங்கினார். இதில் சிறுபான்மை நலக்குழு மாவட்ட தலைவர் பெரியசாமி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய குழு உறுப்பினர் தங்கதுரை, விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி செல்வமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story