திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமூக இடைவெளியை கண்காணிக்கும் நவீன கருவி மக்கள் நெருக்கமாக நின்றால் எச்சரிக்கும்


திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில்   சமூக இடைவெளியை கண்காணிக்கும் நவீன கருவி   மக்கள் நெருக்கமாக நின்றால் எச்சரிக்கும்
x
தினத்தந்தி 5 Jun 2020 11:16 AM IST (Updated: 5 Jun 2020 11:16 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு வருபவர்கள் நெருக்கமாக சமூகஇடைவெளி இல்லாமல் நின்றால் கண்காணித்து எச்சரிக்கும் வகையில் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது.

திருப்பூர், 

கொரோனா ஊரடங்கு இருப்பதால் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியமாகி விட்டது. ஊரடங்கின் தளர்வுகள் காரணமாக அரசு அலுவலகங்கள் செயல்படுகிறது. பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் அலுவலகங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது என்பது கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. அதுபோன்ற இடங்களில் மக்கள் சமூகஇடைவெளியை பின்பற்றுகிறார்களா? என்பதை கண்காணிக்கும் வகையில் நவீன கருவி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் வரியினங்களை வசூலிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பொதுமக்கள் அதிக அளவில் வந்து பணம் செலுத்தி விட்டு செல்கிறார்கள். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை கண்காணிக்கும் வகையில் நவீன கருவி அந்த அறையில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொருத்தப்பட்டுள்ளது.

புகைப்படம்

பணம் வசூலிக்கும் அறையில் 1 மீட்டர் இடைவெளி விடாமல் மக்கள் நெருக்கமாக இருந்தால் இந்த கருவியில் பொருத்தப்பட்ட சென்சார் அதை கண்டறிந்து, சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை என்று ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. சோதனை முறையில் மாநகராட்சி அலுவலகத்தில் இந்த கருவி பொருத்தப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து மாநகராட்சி உதவி பொறியாளர் ராம்மோகன் கூறும்போது, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளது. 40 அடி நீளம், 30 அடி அகலம் கொண்ட அறைக்கு ஒரு கருவி பொருத்தலாம். இந்த கருவியின் சென்சார் 15 மீட்டர் துரம் வரை உள்ள மக்கள் நடமாட்டத்தை கண்டறியும். இந்த கருவியின் மதிப்பு ரூ.15 ஆயிரமாகும். 1 மீட்டர் இடைவெளி இல்லாமல் மக்கள் நெருக்கமாக இருந்தால் அவர்களின் புகைப்படத்தையும் எடுத்து ஆன்லைன் மூலமாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும் வசதி இந்த கருவியில் உள்ளது. வரும் காலங்களில் மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட், அங்காடிகளில் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
1 More update

Next Story