பாகூர், கிருமாம்பாக்கம், மணவெளியில் கொட்டி தீர்த்த மழை


பாகூர், கிருமாம்பாக்கம், மணவெளியில் கொட்டி தீர்த்த மழை
x
தினத்தந்தி 6 Jun 2020 4:18 AM IST (Updated: 6 Jun 2020 4:18 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் உள்ள பாகூர், கிருமாம்பாக்கம், மணவெளி உள்ளிட்ட கிராமப்புறங்களில் நேற்று மழை கொட்டி தீர்த்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. மின் தடையால் கிராமங்கள் இருளில் மூழ்கின.

பாகூர்,

புதுவையில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் முடிந்தபிறகும் நாள்தோறும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. நேற்று மதியம் வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவே தயங்கினார்கள். திடீரென்று மாலை 5 மணியளவில் வானத்தில் கருமேக கூட்டங்கள் காணப்பட்டு இதமான சூழ்நிலை உருவானது. பின்னர் இடி மின்னலுடன் திடீரென பலத்த மழை பெய்தது.

புதுவை கிராமப்புற பகுதியான பாகூர், கிருமாம்பாக்கம், கன்னியகோவில், மணவெளி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் சுமார் 4 மணி நேரம் தொடர்ந்து மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

சேலியமேடு, அரங்கனூர், குடியிருப்பு பாளையம், குருவிநத்தம், சோரியாங்குப்பம், பரிக்கல்பட்டு, கரையாம்புத்தூர் ஆகிய பகுதிகளில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. திடீரென்று பெய்த இந்த மழையால் பல ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

மழை பெய்ததையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாகூர், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பல ஊர்களில் மின்மாற்றிகள் பழுதானது. இதன்காரணமாக 5 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைப்பட்டது. இதனால் பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின.

அதேநேரத்தில் பல நாட்களாக கடும் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்ட பொதுமக்கள் நேற்று மாலை பெய்த இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story