மேட்டுப்பாளையத்தில் விதிமுறைகளை கடைபிடிக்காத 4 காய்கறி மண்டிகளுக்கு சீல் அதிகாரிகள் நடவடிக்கை


மேட்டுப்பாளையத்தில்  விதிமுறைகளை கடைபிடிக்காத 4 காய்கறி மண்டிகளுக்கு சீல்   அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 8 Jun 2020 3:40 AM IST (Updated: 8 Jun 2020 3:40 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையத்தில் 4 காய்கறி மண்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் 16 மண்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

மேட்டுப்பாளையம், 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-அன்னூர் மெயின் ரோட்டில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் 70-க்கும் மேற்பட்ட காய்கறி மண்டிகள் உள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மார்க்கெட்டில் உள்ள மண்டிகளுக்கு காய்கறி வரத்து அதிகரித்து காணப்பட்டது. நீலகிரி மாவட்டம் மற்றும் கர்நாடகாவில் இருந்து லாரிகளில் வந்த காய்கறி மூட்டைகளை மண்டிகளில் இறக்கி வைப்பதும் ஏலம் முடிந்த பின்னர் காய்கறி மூட்டைகளை தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றுவது என சுறுசுறுப்புடன் மார்க்கெட் செயல்பட்டு வந்தது.

இந்தநிலையில் மதியம் 2 மணிக்கு கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தாசில்தார் சாந்தாமணி வருவாய் ஆய்வாளர் சத்யராஜ், கிராம நிர்வாக அலுவலர் மூர்த்தி உள்பட அதிகாரிகள் காய்கறி மார்க்கெட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மார்க்கெட்டில் உள்ள சில காய்கறி மண்டிகளுக்கு முன்பு கை கழுவும் திரவம் மற்றும் தண்ணீர் வைப்பது உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை.

4 மண்டிகளுக்கு சீல்

இதனால் அதிருப்தி அடைந்த அதிகாரிகள் கை கழுவும் திரவம் வைக்காத 4 காய்கறி மண்டிகளுக்கு உடனடியாக சீல் வைத்தனர். மேலும் கைகழுவுவதற்கு தண்ணீர் வைக்காத 16 காய்கறி மண்டிகளுக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்ட 4 காய்கறி மண்டிகளுக்குள் பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ், வெங்காயம், முள்ளங்கி உள்பட பல்வேறு 150 காய்கறி மூட்டைகள் இருந்தன. எனவே சீல் வைப்பதற்கு முன்னர் மண்டிகளுக்குள் இருக்கும் காய்கறி மூட்டைகளை வெளியே எடுத்து விடுகிறோம். நீங்கள் சீல் வைத்து விட்டால் காய்கறிகள் அனைத்தும் அழுகி விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் பெரும் நஷ்டம் ஏற்படும் என்று வருவாய்த்துறையினரிடம் மண்டி உரிமையாளர்கள் முறையிட்டனர்.

ஆனால் அவர்களின் கோரிக்கைக்கு அதிகாரிகள் செவிசாய்க்காததால், போலீசாரின் துணையோடு மண்டிகளுக்கு உடனடியாக சீல் வைக்கப்பட்டது. இதனால் மார்க்கெட்டில் ஒரு மணி நேரம் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

Next Story