சேலம் மாவட்டத்தில் ஓட்டல்களில் இன்று முதல் அமர்ந்து சாப்பிட அனுமதி


சேலம் மாவட்டத்தில் ஓட்டல்களில் இன்று முதல் அமர்ந்து சாப்பிட அனுமதி
x
தினத்தந்தி 8 Jun 2020 6:38 AM IST (Updated: 8 Jun 2020 6:38 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் இன்று முதல் அனைத்து ஓட்டல்களிலும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படுகிறது.

சேலம்,

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் 2 மாதங்களுக்கு மேலாக ஓட்டல்கள் மூடப்பட்டன. இதனால் அத்தொழிலில் ஈடுபட்டு வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி வருமானம் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். பெரும்பாலான ஓட்டல்களில் வேலை செய்து வந்த வெளிமாநில தொழிலாளர்கள் தற்போது அவர்களது சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர்.

இதற்கிடையே ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஓட்டல்களில் பார்சல் வழங்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், 50 சதவீத தொழிலாளர்களுடன் ஓட்டல்கள் இயங்கவும், வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடவும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) முதல் ஓட்டல்கள் முழுமையாக செயல்படும் என்பதால் சமையல் கூடங்களில் பெயிண்ட் அடிப்பது, எலெக்ட்ரிக்கல் வேலை செய்வது மற்றும் மேஜை, நாற்காலிகளை சுத்தம் செய்யும் பணியில் ஓட்டல் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.

சேலத்தில் பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் அழகாபுரம், சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஓட்டல்களிலும் இன்று முதல் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகளில் ஓட்டல் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் கூறியதாவது:-

ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து முன்னேற்பாடு பணிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். சேலம் மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய, பெரிய ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களின் கைகளை கழுவும் வகையில் நுழைவாயிலில் தண்ணீர், சானிடைசர் உள்ளிட்டவை வைக்கப்படும்.

4 பேர் அமர்ந்து சாப்பிடும் இருக்கையில் 2 பேரும், 6 பேர் அமரும் இருக்கையில் 4 பேரும் உட்கார வைக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் உணவு பரிமாறப்படும். சமையல்காரர்கள் மற்றும் சப்ளை தொழிலாளர்கள் அனைவரும் கட்டாயம் கையுறை, முக கவசம் அணிந்து இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓட்டல் முழுவதும் அவ்வப் போது கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story