விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு 314 பள்ளிகள் மையங்களாக அமைப்பு


விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு 314 பள்ளிகள் மையங்களாக அமைப்பு
x
தினத்தந்தி 8 Jun 2020 7:33 AM IST (Updated: 8 Jun 2020 7:33 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு 314 பள்ளிகள் மையங்களாக அமைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.


விழுப்புரம்,

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை வருகிற 15-ந்தேதி நடத்திட அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தேர்வு தொடர்பான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், வருகிற 15-ந்தேதி தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 25-ந்தேதி வரை நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 20,798 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்காக 314 பள்ளிகள் தேர்வு மையங்களாக அமைக்கப்பட உள்ளது. அதாவது மாணவர்கள் அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியை பின்பற்றி தேர்வு எழுதும் வகையில் ஒரு தேர்வு அறையில் 10 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு நுழைவுச்சீட்டு வழங்கும் போது ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் முகக்கவசங்களும் வழங்கப்பட உள்ளது. அதோடு தேர்வு எழுதும் முன்பும், அதன்பின்னரும் அவர்களது கைகளை சுத்தம் செய்துகொள்ள சானிடைசரும் வழங்கப்படும்.

மேலும் ஒவ்வொரு தேர்வு முடியும் போதும் தேர்வு அறைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய அந்தந்த பகுதி நகராட்சி, பேரூராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதே போல் விடைத்தாள்களை பாதுகாப்பு மையங்களுக்கு எடுத்து செல்ல போலீசாரும் உரிய பாதுகாப்பை அளித்திட வேண்டும். தேர்வு நடைபெறும் நாட்களிலும் அந்தந்த மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், திண்டிவனம் சப்-கலெக்டர் அனு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story