விழுப்புரத்தில் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி: அரசின் கட்டுப்பாடுகளை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும்


விழுப்புரத்தில் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி: அரசின் கட்டுப்பாடுகளை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும்
x
தினத்தந்தி 8 Jun 2020 7:43 AM IST (Updated: 8 Jun 2020 7:43 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் இன்று முதல் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் அரசின் கட்டுப்பாடுகளை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று உரிமையாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக ஓட்டல்களில் பார்சல் மூலம் மட்டுமே விற்பனை நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அரசு அனுமதி அளித்து இருக்கிறது. இதிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு வகுத்துள்ளது. இதை பின்பற்றி ஓட்டல்களை இயக்க அதன் உரிமையாளர்கள் தங்களை முழுவீச்சில் தயார் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில், அரசு நிபந்தனைகளை கடைபிடிப்பது தொடர்பாக ஓட்டல் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், ஓட்டல்களில், வெப்ப நிலையை அளவிடும் தெர்மல் ஸ்கேனர் கருவிகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். ஓட்டலுக்கு வருபவர்களை இதன் மூலம் உடல் வெப்பநிலையை அளவீடு செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் கொரோனா அறிகுறி உள்ள நபர்களை உள்ளே அனுப்ப கூடாது. ஏ.சி.க்களை இயக்குவதால் கொரோனா வைரஸ் எளிதில் பரவும் ஆபத்து இருக்கிறது. எனவே ஏ.சி.யை பயன்படுத்தக்கூடாது. இதற்கு மாறாக மின்விசிறிகளை இயக்கிக் கொள்ளலாம். மேலும் 50 சதவீத இருக்கைகளையும் சமூக இடைவெளியை பின்பற்றி அமைத்திட வேண்டும். ஒரு டேபிளுக்கும் மற்றொரு டேபிளுக்கும் இடையே 6 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.

தினமும் கழிவறைகளை 5 முறை சுத்தமாக கழுவ வேண்டும். ஊழியர்கள் எல்லோரும் முக கவசம், கையுறை ஆகியவற்றை அணிந்து பணி செய்ய அறிவுறுத்திட வேண்டும். செயின், கடிகாரம் உள்ளிட்ட ஆபரணங்கள் ஊழியர்கள் அணியக்கூடாது. உணவுகளை சமைக்கும் போது சரியாக தரக்கட்டுப்பாட்டை பயன்படுத்த வேண்டும். கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்க கூடாது. பழைய உணவு பொருட்களை விற்கக் கூடாது. அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றாத ஓட்டல்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கூறி எச்சரிக்கை விடுத்தார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், திண்டிவனம் சப்-கலெக்டர் அனு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணகுமார், விழுப்புரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வேணுகோபால் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story