ஆற்காடு அருகே உறவினர்கள் கூட்டத்துடன் நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்


ஆற்காடு அருகே உறவினர்கள் கூட்டத்துடன் நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 8 Jun 2020 10:34 AM IST (Updated: 8 Jun 2020 10:34 AM IST)
t-max-icont-min-icon

ஆற்காடு அருகே உறவினர்கள் கூட்டத்துடன் நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி மணமக்களை வெளியேற்றினர். அத்துடன் மண்டபமும் பூட்டு போட்டு பூட்டப்பட்டது.


ஆற்காடு,

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திருமண மண்டபங்களில் திருமணங்கள் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடத்த கூடாது என அரசு அறிவித்துள்ளது. மேலும் திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஏற்கனவே திருமணம் நடத்த முன்பதிவு செய்தவர்கள் பணத்தை திரும்ப பெற்று எளிமையான முறையில் கோவில்கள் மற்றும் வீட்டிலேயே நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பஸ் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த மணமக்களுக்கு நேற்று காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள்ளாக திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு மணமக்கள் அழைப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று காலை மணமக்கள் மணமேடையில் திருமணக்கோலத்தில் அமர்ந்திருந்தனர். தாலி கட்டுவதற்கு சில மணித்துளிகள் இருக்கும்போது ஆற்காடு நகராட்சி ஆணையாளர் அனந்தபத்மநாபன் சிவத்திற்கு (பொறுப்பு) தடையை மீறியும், உறவினர்கள் கூட்டத்துடனும் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து ஆற்காடு நகராட்சி வருவாய் ஆய்வாளர் ராஜா, சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் திருமணம் நடைபெற இருந்த மண்டபத்திற்கு சென்றனர். பின்னர் மணமகள் வீட்டாரிடம் அனுமதி இல்லாமல் திருமணம் நடத்த கூடாது என கூறியதுடன் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து மண்டபத்தில் மணமக்களை வாழ்த்த வந்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள், மணமக்கள் மற்றும் பெற்றோர்கள் 100-க்கும் மேற்பட்டோரை மண்டபத்தில் இருந்து வெளியேற்றினர்.

விருந்துக்காக சமைக்கப்பட்டிருந்த உணவுகளையும் வெளியே எடுத்துச் செல்லும்படி கூறினர். பின்னர் அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு மண்டபத்திற்கு பூட்டு போட்டனர். மேலும் தடையை மீறி திருமணம் நடத்த அனுமதி அளித்த மண்டப உரிமையாளரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து திருமண மண்டபத்திற்கு நோட்டீஸ் வழங்கவும் உத்தரவிட்டனர்.

திருமணம், மண்டபத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதால் ஆற்காடு மாசாபேட்டை வீட்டுவசதி வாரியம் பகுதியிலுள்ள விநாயகர் கோவிலில் மணமக்களுக்கு எளிமையான முறையில் முககவசம் அணிந்தபடி திருமணம் நடந்தது. அங்கு நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டும் சென்று மணமக்களை வாழ்த்தினர்.

Next Story